காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசியதற்கு ஓவைசி எதிர்ப்பு


காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசியதற்கு ஓவைசி எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 1:31 PM GMT (Updated: 20 Aug 2019 1:31 PM GMT)

காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்பிடம் பிரதமர் மோடி பேசியதற்கு ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள்  சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் நிலையில், பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக டிரம்பிடம் அவர் கூறும்போது, ‘பிராந்தியத்தின் தற்போதைய சூழலை பொறுத்தவரை, குறிப்பிட்ட சில பிராந்திய தலைவர்களின் (இம்ரான்கான்) மிதமிஞ்சிய பேச்சுகளும், இந்தியாவுக்கு எதிரான வன்முறை போக்குகளும் அமைதிக்கு உகந்தது அல்ல’ என்று தெரிவித்தார்.

பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விதிவிலக்கின்றி ஒழிப்பதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இம்ரான்கான் ஏற்கனவே டிரம்புடன் பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடியும் டிரம்புடன் தொலைபேசியில் பேசியிருந்தார். 

இந்த நிலையில், காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம் எனவும், இதை ஏன் அமெரிக்காவிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.  ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு ஓவைசி அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ ஆரம்பம் முதலே, காஷ்மீர்  விவகாரம் இருதரப்பு பிரச்சினை என்று கூறி வருகிறோம். இதே நிலைப்பாட்டில்தான் இந்தியா உள்ளது. எனவே,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பிரதமர் மோடி இது குறித்து பேசி புகார் கூற வேண்டிய அவசியம் என்ன?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story