தொடரும் வேலையிழப்பு அபாயம்! 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு?


தொடரும் வேலையிழப்பு அபாயம்! 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு?
x
தினத்தந்தி 21 Aug 2019 10:18 AM GMT (Updated: 21 Aug 2019 10:18 AM GMT)

பிஸ்கட் விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான பார்லே நிறுவனம் 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை,

இந்தியாவில் பல துறைகளின் உற்பத்தி குறைந்து வருவதால் பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறை பெரும் பின்னடவை எதிர்கொண்டுள்ளது. வாகன விற்பனை கடந்த 19 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், அந்தத்துறையில் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெருநிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை சில நாட்கள் நிறுத்தி வைத்தன.  

இந்த நிலையில், பிஸ்கட் விற்பனையில் கோலோச்சி வந்த நிறுவனங்களில்  ஒன்றான பார்லே நிறுவனமும், விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊரக பகுதிகளில், பார்லே நிறுவனத்தின் பிஸ்கட்களுக்கான தேவை கடுமையாக சரிந்துள்ளதால், உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.  விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டதையடுத்து, அந்நிறுவனத்தில் பணியாற்றும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

அந்நிறுவனத்தின் அதிகாரியான மயங்க் ஷா கூறும் போது,  தற்போதைய சூழல் மிகவும் மோசமாக உள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால்,  வேலையில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். 1929- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பார்லே நிறுவனம், நேரடியாகவும் ஒப்பந்த முறையிலும் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.  பார்லே நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற பார்லே ஜி பிஸ்கட் விற்பனை, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் விதிக்கப்படுவதால், பார்லே ஜி பிஸ்கட் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 

Next Story