ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்


ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:51 AM GMT (Updated: 21 Aug 2019 11:51 AM GMT)

முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் தரப்பு இன்று காலை மேல்முறையீடு செய்தது. ஆனால், மனு பட்டியலிடப்படாததால், மனுவை இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா,  தலைமை நீதிபதியை அணுகுமாறு  கூறினார். 

இதையடுத்து, அயோத்தி தொடர்பான வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்ததால், அந்த வழக்கு விசாரணை முடிந்த பின், தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு  வழக்கறிஞர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அயோத்தி வழக்கு முடிந்ததும் அரசியல் சாசன அமர்வு கலைந்து  சென்றது. இதனால்,  ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால், அவரை கைது செய்ய தடையில்லை. முன்ஜாமீன் மனு பட்டியலிடப்படாத நிலையில் இன்று விசாரணை நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

Next Story