ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா ஆதரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா ஆதரவு
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 10:42 PM GMT)

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது என்று ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றையும், முதுகெலும்பு இல்லாத சில ஊடகங்களையும் மோடி அரசு பயன்படுத்துகிறது. இந்த இழிவான அதிகார துஷ்பிரயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மிகவும் தகுதிபடைத்த, மதிக்கத்தக்க மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரம், நாட்டுக்கு பல்லாண்டுகளாக சேவை புரிந்துள்ளார். நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.

அவர் தயங்காமல் உண்மைகளை பேசுவார், இந்த அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவார். ஆனால் இந்த உண்மைகள், கோழைகளுக்கு அசவுகரியமாக இருப்பதால், அவரை வெட்கமின்றி வேட்டையாட துடிக்கின்றனர். இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் கவலைப்படாமல், உண்மைக்காக போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்திலும் ப.சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “ப.சிதம்பரம், நன்கு தகுதிவாய்ந்த, மதிக்கத்தக்க தலைவர். அவருக்கு ஆதரவாக இருக்கிறோம். அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டுக்கு சேவை செய்துள்ளார். உண்மைக்கான அவரது போராட்டத்தை ஆதரிக்கிறோம். உண்மை பேசியதற்காக, ஒரு அரசு, சொந்த மக்களையே துன்புறுத்துவது கோழைத்தனமானது” என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, ஆனந்த் சர்மா, ஆர்.பி.என்.சிங் ஆகியோரும் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story