ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை - அவசரமாக விசாரிக்க நீதிபதி மறுப்பு


ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை - அவசரமாக விசாரிக்க நீதிபதி மறுப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 11:15 PM GMT (Updated: 21 Aug 2019 10:50 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவருடைய மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, 2007-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றது.

இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த ஜனவரி 25-ந்தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில் கவுர், நேற்று முன்தினம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை அமல்படுத்தவும், ப.சிதம்பரத்தை கைது செய்ய 3 நாட்களுக்கு தடை விதிக்குமாறும் அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

ஐகோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ப.சிதம்பரத்தை கைதுசெய்ய டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் அவருடைய வீட்டின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதேபோல் அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு சென்று விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

இதற்கிடையே, ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்து, அதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். ஆனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா ஆகியோர் நேற்று காலை, சுப்ரீம் கோர்ட்டு தொடங்கியதும் தலைமை நீதிபதி அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்ததால், நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் ஆஜராகி, டெல்லி ஐகோர்ட்டு ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுக்கும் வகையில் பட்டியலிட உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி என்.வி.ரமணா, இந்த கோரிக்கையை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு முன்வைப்பதாக தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் மீண்டும் கபில் சிபல் உள்ளிட்ட வக்கீல்கள் பிற்பகல் 2 மணிக்கு நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் சென்று முறையிட்டனர். அப்போது, “மனுவில் உள்ள சில குறைபாடுகள் நீக்கப்படாததால், விசாரணைக்காக அது இன்னும் பட்டியலிடப்படவில்லை” என்று நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

அதற்கு கபில் சிபல், மனுவில் இருந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும், அதனை பட்டியலிட தடை ஏதும் இருக்க முடியாது என்றும் கூறினார்.

உடனே நீதிபதி என்.வி.ரமணா சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை வரவழைத்து ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்படாதது குறித்து விசாரித்தார். அதற்கு பதிவாளர், மனுவில் உள்ள குறைபாடுகள் சற்று நேரத்துக்கு முன்புதான் நீக்கப்பட்டன என்றும், மனுவை பட்டியலிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி என்.வி.ரமணா, மனு இன்னும் பட்டியலிடப்படாத நிலையில் அதை விசாரித்து அதன் மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.

அதற்கு கபில் சிபல், முன்பு பல சந்தர்ப்பங்களில் வாய் வழி முறையீட்டின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருப்பதாக தெரிவித்தார். மேலும் ப.சிதம்பரம் எங்கும் ஓடிப்போக மாட்டார் என்றும், அவருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், இது மிகவும் தவறானது என்றும் கூறினார்.

ஆனால், மனுவை விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ப.சிதம்பரம் தரப்பு வக்கீல்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்று வந்த அரசியல் சாசன அமர்வில் சென்று முறையிட முடிவு செய்தனர்.

ஆனால் நேற்றைய விசாரணை முடிந்ததும் தலைமை நீதிபதி உள்ளிட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்த நீதிபதிகள் புறப்பட்டுச்சென்று விட்டனர். இதனால் தலைமை நீதிபதி முன்பு முறையிட முடியாமல் போனது.

இந்தநிலையில், ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பட்டியலிட்டு இருப்பதாக அவரது வக்கீல்களிடம் சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கபில் சிபல் உள்ளிட்ட ப.சிதம்பரத்தின் வக்கீல்கள் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கிளம்பிச் சென்றனர்.

டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு நாளை (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருப்பதால், அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது நாளை தெரிந்துவிடும்.

இதற்கிடையே, ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று காலையிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அப்போது அங்கிருந்த அவரது வக்கீல்கள், ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று கூறினார்கள்.

ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார்? என்று தெரியாமல் இருந்தால், தேடப்படும் நபர் என்ற வகையில் அவருக்கு எதிராக சி.பி.ஐ. ‘லுக் அவுட்’ எனப்படும் தேடுதல் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. இதேபோல் அமலாக்கத்துறையும் தேடுதல் நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

வான் வழியாகவும் மற்றும் துறைமுகங்கள், நாட்டின் எல்லைப்பகுதி வழியாகவும் அவர் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் இந்த நடவடிக்கையை எடுத்தன.


Next Story