தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் ப.சிதம்பரம் திடீர் கைது


தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் ப.சிதம்பரம் திடீர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2019 12:15 AM GMT (Updated: 21 Aug 2019 11:07 PM GMT)

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிராக நேற்று தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இரவில் திடீரென்று அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்காக டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

இந்த நிலையில், தேடப்படும் நபர் என்ற வகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’ எனப்படும் தேடுதல் நோட்டீஸ் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி அவரது வக்கீல்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். முன்ஜாமீன் மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார்? என்று தெரியாமல் இருந்த நிலையில், நேற்று இரவு 8.30 மணி அளவில் அவர் திடீரென்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் கபில் சிபல் உள்ளிட்ட அவரது வக் கீல்களும் வந்து இருந்தனர்.

அங்கு பரபரப்பு பேட்டி அளித்த ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தன் மீதோ அல்லது தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையில் தன் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றும் கூறினார். அத்துடன் சட்ட நடவடிக்கைக்கு பயந்து ஓடி ஒளியவில்லை என்றும், தான் சட்டத்தை மதிப்பதை போல் விசாரணை அமைப்புகளும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ப.சிதம்பரம் திடீரென்று பேட்டி அளிப்பதை அறிந்ததும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அங்கு வந்து, காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே காத்து இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை.

பேட்டி முடிந்ததும், ப.சிதம்பரம் தனது வக்கீல்களுடன் ஜோர் பாக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

அதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் கார்களில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சென்ற போது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டி இருந்தது. கதவை திறக்குமாறு கூறியும், நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், இனி காத்து இருப்பதில் அர்த்தம் இல்லை என்று கருதிய சி.பி.ஐ. அதிகாரிகள் காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்து வீட்டுக்குள் சென்றனர்.

ப.சிதம்பரம் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்ததும் அங்கு ஏராளமான காங்கிரசார் திரண்டனர். பத்திரிகையாளர்களும் வந்தனர்.



 

உள்ளே சென்ற அதிகாரிகள் ப.சிதம்பரத்துடன் சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அதன்பிறகு அவரை கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை காரில் ஏற்றி அங்கிருந்து தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது பலர் அந்த காரின் பின்னால் சிறிது தூரம் ஓடினார்கள்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட தகவலை சி.பி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான 73 வயது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரை கைது செய்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சி.பி.ஐ. கோர்ட்டில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், கோர்ட்டு உத்தரவின்படியே மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இரவு முழுவதும் அவர் தங்கள் காவலில் வைக்கப்பட்டு இருப்பார் என்றும் நேற்று இரவு சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ப.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சார்பில் தனிக்கோர்ட்டில் அனுமதி கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



Next Story