உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு


உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 12:38 PM GMT (Updated: 22 Aug 2019 2:02 PM GMT)

உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் நந்த்கிராம் பகுதியில் இன்று  கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஐந்து துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கிய ஒருவரை காப்பாற்ற மற்றவர்கள் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர் என தகவல்கள்  வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் யாரென அடையாளம் காணப்படவில்லை. 

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மாநிலங்களவையில் தெரிவித்த தகவலில், கடந்த மூன்று ஆண்டுகளில் 88 பேர் நாடு முழுவதும் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர் என தெரிவித்து இருந்தார். 

ஜூன் மாதத்தில் குஜராத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது 7 பேர் உயிரிழந்தனர். தபோய் தாலுகாவில் உள்ள பார்டிகுய் கிராமத்தில் ஓட்டலுக்கு வெளியே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு வெளியேறி அதனை சுவாசித்தவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர் என தெரிவிக்கப்பட்டது. பலியானவர்களில் நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மூன்று ஓட்டல் ஊழியர்கள் ஆவர். இந்தியா முழுவதும் தொடர்ந்து இந்த அவலம் நடைபெற்று வருகிறது.

Next Story