ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்பரத்துக்கு 5 நாள் சி.பி.ஐ. காவல் டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்பரத்துக்கு 5 நாள் சி.பி.ஐ. காவல் டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Aug 2019 12:15 AM GMT (Updated: 22 Aug 2019 7:00 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நேற்று பலத்த பாதுகாப்புடன் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

புதுடெல்லி, 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக் கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், ப.சிதம்பரம் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். வீட்டின் கதவு திறக்கப்படாததால் காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்று அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ப.சிதம்பரத்தை ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்திவிட்டு, பின்னர் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இரவில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

அதன்பிறகு அலுவலகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தின் கீழ் தளத்தில் உள்ள 5-வது எண் அறையில் ப.சிதம்பரம் தங்க வைக்கப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் அங்கு தூங்கினார்.

நேற்று காலை ப.சிதம்பரத்திடம் மீண்டும் விசாரணை தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.பார்த்தசாரதி தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜியின் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்டனர்.

பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் ப.சிதம்பரத்தை ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு நீதிபதி அஜய் குமார் குகர் முன்பு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள்.

ப.சிதம்பரம் சார்பில் காங்கிரஸ் தலைவர்களும், மூத்த வக்கீல்களுமான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் விவேக் தங்கா ஆகியோர் ஆஜரானார்கள். சி.பி.ஐ. சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த வழக்கு விசாரணையில் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே அவரை எங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அவரிடம் சில ஆவணங்கள் குறித்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீன் பாதுகாப்பை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முந்தைய கட்டத்தில் இந்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அவர் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பாதுகாப்பின் கீழ் இல்லாத நிலையில்தான் அவரிடம் சில கேள்விகளை எழுப்ப முடியும். பண பரிமாற்றம் இருந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எனவே, அவரை 5 நாட்களுக்கு சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறிய அவர் சிபி.ஐ.யின் வழக்கு டைரியை (நாட்குறிப்பு) நீதிபதி முன்பு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் ஏற்கனவே ஜாமீனில் உள்ளனர். வரைவு குற்றப்பத்திரிகை தயாராக இருக்கிறது என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கில் விசாரணை ஏற்கனவே முடிவடைந்துள்ளது என்றுதான் பொருள்.

இந்த விவகாரத்தில் ஏதோ நடந்து இருக்கிறது என்று சி.பி.ஐ. கூறுவதால், அது மட்டுமே வேத சத்தியம் ஆகிவிடாது. இது தனி மனித சுதந்திரம் தொடர்பானது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி ப.சிதம்பரத்திடம் மேற்கொண்ட விசாரணை குறித்த ஆவணங்களை கோர்ட்டு தயவு செய்து கேட்டு பெற வேண்டும்.

நேற்று இரவு அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சி.பி.ஐ. கூறியது. ஆனால் நள்ளிரவு 12 மணிவரை விசாரணையை அவர்கள் தொடங்கவில்லை. அவரிடம் வெறும் 12 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ப.சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இங்கு கோர்ட்டில் நீதிபதி முன்பு கேட்கப்பட்ட 12 கேள்விகளுக்கும் அவர் ஏற்கனவே பதில் அளித்து இருக்கிறார். அவர் எந்த வகையிலும் கேள்விகளை தவிர்க்கும் வகையில் பதில் அளிக்கவில்லை.

இந்த வழக்கு 2017-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அப்போது இருந்தே அவரிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டு இருக்கலாம் அல்லது அவர் விசாரணைக்கு ஆஜரான 2018-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதியன்று கேட்டு இருக்கலாம். இது தொடர்பாக சி.பி.ஐ. அவருக்கு எந்த கடிதமும் அனுப்பாதது ஏன்?

ஐகோர்ட்டு நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை 7 மாதங்களுக்கு ஒத்திவைத்தார். அது சிதம்பரம் கேட்டுப்பெற்ற பாதுகாப்பு குடையா? காவலில் எடுத்து விசாரிக்க மிகவும் வலுவான காரணங்கள் வேண்டும். அவை எதுவும் இவர்களிடம் இல்லை. ப.சிதம்பரம் நடத்தப்பட்ட விதம் குறித்து மிகவும் கடுமையான ஆட்சேபணை உள்ளது. வழக்கு விவரம் தொடர்பான டைரியில் எழுதப்பட்டு உள்ளவை ஆதாரம் ஆகாது. அது விசாரணைக்கு அல்லது வழக்குக்கு மட்டுமே உதவும்.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

ப.சிதம்பரம் சார்பில் மற்றொரு மூத்த வக்கீலான அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த வழக்கு முழுவதும் வழக்கு டைரியில் எழுதப்பட்டவை மற்றும் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 4 மாதம் கழித்துத்தான் ப.சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

தற்போது காவலில் எடுத்து விசாரிப்பதற்கு, இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறியிருக்கிறார் என்ற காரணத்தை சி.பி.ஐ. கூறுகிறது. காவலில் எடுத்து விசாரிப்பது என்பதன் நோக்கம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதாக இருக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது,

இந்த விவகாரத்தில், அன்னிய முதலீட்டை பெறுவதற்கான ஒப்புதல் 6 செயலாளர்களால் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் இப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் எந்த வகையிலும் ஒத்துழைப்பு அளிக்க தவறவில்லை.

இந்த வழக்கில் புதிதாக எதுவும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது ப.சிதம்பரத்தை எதற்கு காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்?

இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி கூறினார்.

அப்போது ப.சிதம்பரம் குறுக்கிட்டு ஏதோ பேசவேண்டும் என்று கூறினார். அதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அபிஷேக் மனு சிங்வி, “குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடைய தரப்பில் கோர்ட்டில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு சில ஐகோர்ட்டு தீர்ப்புகள் ஆதாரமாக உள்ளன” என்று கூறினார்.

தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

குற்றம் சாட்டப்பட்டவர் எந்த பதிலும் கூறாத அசாத்திய வலிமை கொண்டவர். எந்த வகையிலும் ஒத்துழைக்காதவர். கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இப்போது விசாரணை தொடர்ந்து வருகிறது. காவலில் எடுப்பது எங்கள் உரிமை. குற்றம் சாட்டப்பட்டவரிடம் நாங்கள் விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர், முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு 7 மாதங்களுக்கு பாதுகாப்பு குடையின் கீழ் இருந்தார். ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜாமீன் வழங்க முடியாத அளவு இந்த குற்றம் தீவிரமானது என்று கூறப்பட்டு உள்ளது.

அவரிடம் நாங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவரை விசாரிக்கும் எங்கள் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். நாங்கள் புத்திசாலிகளை சமாளித்து வருகிறோம். பிரச்சினையின் ஆணிவேர் வரை நாங்கள் செல்லவில்லை என்றால் அரசு தரப்பாக நாங்கள் தோல்வி அடைந்தவர்கள் ஆகிவிடுவோம்.

இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.

அதன்பிறகு ப.சிதம்பரம் பேசுவதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஜூன் 6-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை தயவு செய்து கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். அதில் நான் பதில் அளிக்காத எந்த கேள்வியும் கிடையாது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறேன். பணபரிமாற்றம் போன்ற எந்த குற்றச்சாட்டும் என்மீது வைக்கப்படவில்லை. வெளிநாட்டு வங்கி கணக்கு எனக்கு உள்ளதா? என்றுதான் என்னிடம் கேட்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சி.பி.ஐ. வக்கீல் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது:-

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த சதியில் மற்றவர்களுடன் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் ப.சிதம்பரத்தின் பெயர் இல்லை என்றும், எனவே அவரை கைது செய்தது தவறு என்றும் அவரது தரப்பில் கூறப்படும் வாதத்தை ஏற்க முடியாது. சட்ட விதி முறைகளின்படி குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை. விசாரணையின் போதுதான் யார்-யார் குற்றம் செய்து இருக்கிறார்கள் என்று தெரியவரும்.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்துக்கும் மனுதாரர் தலைமை ஏற்று இருக்கிறார் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. எனவே அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குகர், ப.சிதம்பரத்தை வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் விதிமுறைகளின்படி ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரும், வக்கீல்களும் தினசரி அவரை 30 நிமிடம் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவரை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்றும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் தனிக்கோர்ட்டில் இருந்து தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ப.சிதம்பரம் தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் வக்கீல்கள் சிலரும் வந்து இருந்தார்கள்.

Next Story