பாக். விமானப்படையுடன் சண்டை நடந்தபோது இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை வீழ்த்தியது, இந்திய ஏவுகணை - அதிர்ச்சி தகவல்


பாக். விமானப்படையுடன் சண்டை நடந்தபோது இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை வீழ்த்தியது, இந்திய ஏவுகணை - அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2019 10:31 AM GMT (Updated: 23 Aug 2019 8:28 PM GMT)

பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டை நடந்தபோது இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை வீழ்த்தியது, இந்திய ஏவுகணைதான் என்று உயர்மட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பலியானார்கள். இதற்கு பழிதீர்க்கும்வகையில், பிப்ரவரி 26-ந் தேதி, பாகிஸ்தானுக்குள் புகுந்து, பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இதனால், அவமானம் அடைந்த பாகிஸ்தான் மறுநாள், இந்தியாவுக்குள் புகுந்து இந்திய ராணுவ நிலைகளை தாக்கி அழிக்க தனது விமானப்படையை ஏவியது. பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள், இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது இந்திய விமானப்படை விமானங்கள் துரத்தின. அப்போது, இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்தது. இந்த களேபரத்தில், காஷ்மீர் மாநிலம் பட்காமில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 7 பேர் பலியானார்கள். தங்களது விமானப்படைதான் அதை அழித்ததாக பாகிஸ்தான் பெருமை பேசியது.

இருப்பினும், இதுகுறித்து விமானப்படை உயர் அதிகாரி மூலம் உயர்மட்ட விசாரணைக்கு விமானப்படை தலைமையகம் உத்தரவிட்டது. தரையில் இருந்து வானை நோக்கி பறந்து சென்ற ஏவுகணைதான் ஹெலிகாப்டரை வீழ்த்தியது கண்டறியப்பட்டதால், ஏவுகணையை கையாளும் பிரிவினர் உள்பட பலரது பங்கு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில், இந்திய ஏவுகணைதான், இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தெரிய வந்துள்ளது. சொந்த நாட்டு ஹெலிகாப்டரா? எதிரி நாட்டு ஹெலிகாப்டரா? என்பதை விமான பாதுகாப்பு ரேடார்கள் அடையாளம் காண உதவும் வசதி, எல்லா ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களில் உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டரில் அந்த வசதி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால், அது யாருக்கு சொந்தமானது என்பதை கண்டறிய முடியாமல், ரேடாரை கையாளும் அதிகாரிகள் திணறினர். அவர்களுக்கும், ஹெலிகாப்டரில் இருந்த குழுவினருக்கும் தகவல் தொடர்பும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் போய்விட்டது.

இந்த சூழ்நிலையில், குழப்பத்தில் இருந்த அதிகாரிகள், அந்த ஹெலிகாப்டர் மீது ஏவுகணையை செலுத்தி வீழ்த்தி விட்டனர். இதற்கு காரணமான குரூப் கேப்டன் உள்பட 4 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ராணுவ சட்டப்படி, கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கொலை குற்றம் சுமத்துவது அவற்றில் ஒன்று என்று தெரிகிறது.


Next Story