உத்தர பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு


உத்தர பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு
x
தினத்தந்தி 23 Aug 2019 11:38 AM GMT (Updated: 23 Aug 2019 12:12 PM GMT)

உத்தர பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகள் மத்தியில் பெரும் எமனாகவே இருந்து வருவது பல்வேறு கட்ட ஆய்வுகளில் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியா முழுவதும் சிறார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் சில மாநிலங்களில் இந்த மதிய உணவு திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவது கிடையாது. 

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து என்ற இலக்கை சில மாநிலங்களில் கொடுக்கப்படும் மதிய உணவு கேள்விக்குறியாக்குகிறது. மாநில அரசுகள் வழங்கும் உணவு திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்றால் கிடையாது என்ற நிலைதான் உள்ளது.
 
உத்தர பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டு கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் விமர்சனங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரவின. பள்ளி வளாகத்தில் அமர்ந்து ரொட்டியை உப்பில் தொட்டுக் கொண்டு சிறார்கள் சாப்பிடும் விடியோவை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா அரசு நடக்கிறது. 

பள்ளியில் மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப்பட்டியலில் பருப்பு, சாதம், ரொட்டி, காய்கறிகள் என்று வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது. மேலும் சொல்லப்போனால் வாரத்தில் சில நாட்கள் மட்டும் சிறார்களுக்கு பாலும், பழமும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறார்களின் பெற்றோர் பேசுகையில், உப்பும், ரொட்டியும்தான் கொடுப்பார்கள். சில நாட்கள் சாதமும், அதற்கும் தொட்டுக்கொள்ள உப்புதான் கொடுப்பார்கள் எனக் கூறியுள்ளனர். அவர்கள் தங்களுடைய அடையாளத்தை வெளியே தெரிவித்துக்கொள்ள விரும்பவில்லை.  

யாராவது முக்கியப் பிரமுகர்கள் வந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பால் மற்றும் உரிய உணவு வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் அனுராக் பட்டேலிடம் முறையிட்டதில், இது உண்மை என்று தெரியவந்தால், விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மதிய உணவு விவகாரத்தில் ஆசிரியர்கள், மதிய உணவு நிர்வாகிகள் மத்தியில் அலட்சியம் இருந்துள்ளது.  ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். உத்தர பிரதேச அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story