ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது


ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது
x
தினத்தந்தி 23 Aug 2019 2:30 PM GMT (Updated: 23 Aug 2019 2:30 PM GMT)

ரூ.4,500 கோடி கடன் பாக்கி காரணமாக ஏர் இந்தியாவுக்கு சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

இந்தியாவின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாது என்ற நிலையை நோக்கி செல்லவிருந்தது. நிறுவனத்திற்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. இருப்பினும் ஏர் இந்தியா எரிபொருள்  வாங்கியதற்கான தொகை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது.  கடந்த 200 நாட்களாகவே ஏர்இந்தியா எரிபொருள் செலவுக்கான பணத்தை செலுத்தவில்லை. எரிபொருள் செலவு ரூ. 4,500 கோடியையும் திருப்பி செலுத்தவில்லை.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக  90 நாட்கள் வரை தான் கடன் வழங்கும். ஏர் இந்தியாவுக்கு கடன் வழங்கி 200 நாட்கள் தாண்டியும் திருப்பி செலுத்தப்படவில்லை. இதனால் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து ராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏர்இந்தியா மிகப்பெரிய கடன் பொறுப்புகளை கையாள முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story