கருப்பு பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று விளையாடுவார்கள் என பிசிசிஐ தகவல்


கருப்பு பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று விளையாடுவார்கள் என பிசிசிஐ தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2019 11:59 AM GMT (Updated: 24 Aug 2019 11:59 AM GMT)

அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அருண் ஜெட்லி, அரசியலில் மட்டும் ஆர்வம் காட்டாமல் விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தினார். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராக 2009 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அருண் ஜெட்லி,  ஐபிஎல் மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில் அப்பொறுப்பில் இருந்து விலகினார். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராகவும் அருண் ஜெட்லி பொறுப்பு வகித்துள்ளார். 

அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளர். விராட் கோலி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  அருண் ஜெட்லியின் மறைவு செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. சிறந்த நபரான அருண் ஜெட்லி, எப்போதும் அனைவருக்கும் உதவ தயாராக இருப்பவர். 2006 ஆம் ஆண்டு எனது தந்தை மறைவின் போது, எனது இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு இரங்கல் தெரிவித்துச் சென்றார்.  அருண் ஜெட்லியின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story