காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது - டெல்லி திரும்பிய ராகுல் காந்தி பேட்டி


காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது - டெல்லி திரும்பிய ராகுல் காந்தி பேட்டி
x
தினத்தந்தி 24 Aug 2019 1:44 PM GMT (Updated: 24 Aug 2019 10:25 PM GMT)

காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று டெல்லி திரும்பிய ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை.

மாநிலத்தை பார்வையிட கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட்  பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றபோது ஸ்ரீநகரில் இருந்து திருப்பி விடப்பட்டனர். ஏற்கனவே காஷ்மீருக்கு 2 முறை செல்ல முயன்ற குலாம்நபி ஆசாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல முடிவு செய்தனர். 

ராகுல்காந்தியுடன் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதன்படி,  ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்  ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை தந்தனர். 

ஆனால், விமான நிலையத்திலேயே எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். 

இந்தநிலையில், டெல்லி திரும்பிய ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

சில நாட்கள் முன்பு காஷ்மீர் கவர்னர் என்னை காஷ்மீர் நிலைமை பற்றி நேரில் பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்தார். நானும் அதனை ஏற்றுக்கொண்டேன். அங்குள்ள மக்களின் நிலைமையை நாமும் தெரிந்துகொள்ளலாம் என்று விரும்பினேன். ஆனால் எங்களை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லவே அனுமதிக்கவில்லை.

எங்களுடன் இருந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இப்போது காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலையில் இல்லை என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம்நபி ஆசாத் கூறும்போது, “எங்களை நகருக்குள் செல்லவே அனுமதிக்கவில்லை. ஆனால் காஷ்மீரில் நிலைமை மிகவும் பயங்கரமாக உள்ளது. நாங்கள் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி திரும்பிய விமானத்தில் எங்களுடன் பயணித்த பயணிகள் கூறும் கதைகளை கேட்டால் கண்ணீர் வருகிறது” என்றார்.


Next Story