''நாடு ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துள்ளது'' மன்மோகன் சிங் இரங்கல்


நாடு ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துள்ளது  மன்மோகன் சிங் இரங்கல்
x
தினத்தந்தி 24 Aug 2019 3:25 PM GMT (Updated: 24 Aug 2019 3:25 PM GMT)

''நாடு ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துள்ளது'' என்று அருண் ஜெட்லி மறைவிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு  வந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கலை அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லிக்கு ஒரு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.

இரங்கல் கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது:

"எங்கள் அன்புக்குரிய அருண் ஜெட்லியின் அகால மறைவின் சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கத்தை அடைந்துள்ளேன். அவர் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞர், சிறந்த சொற்பொழிவாளர், மேம்பட்ட ஒரு சிறந்த நிர்வாகி மற்றும் சிறந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்த ஒரு உயர்ந்த தலைவரை நாடு இழந்துள்ளது.

இந்த தருணத்தில் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரும் இழப்பை தைரியத்துடனும், துணிச்சலுடனும் தாங்கிக்கொள்ள உங்கள் அனைவருக்கும் பலம் அளிக்குமாறு சர்வ வல்லமையுள்ளவரிடம் பிரார்த்திக்கிறேன்" 

இவ்வாறு மன்மோகன் சிங் தனது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story