அரசியல் சாணக்கியர் அருண் ஜெட்லி


அரசியல் சாணக்கியர் அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 10:42 PM GMT)

முன்னாள் மத்திய நிதி மந்திரியான அருண் ஜெட்லி பா.ஜனதாவின் அரசியல் சாணக்கியராக கருதப்படுகிறார்.


இந்திய அரசியல் வானில் மின்னி வந்த வெண்ணிலா, அருண் ஜெட்லி. அவர் மீது தனி வாழ்விலும், பொது வாழ்விலும் எந்த களங்கமும் யாராலும் சுமத்தப்பட்டது இல்லை என்பதே அவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதற்கு சாட்சி.

நாடு விடுதலை அடைந்தபோது இன்றைய பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த குடும்பம், அருண் ஜெட்லியின் குடும்பம்.

தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி, பிரபலமான வக்கீல்.

தந்தையைப் போன்றே தனயனும் சட்டம் படித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக கொடி கட்டிப்பறந்தார். தந்தையைப் போன்றே இவரும் பிரபல வக்கீலாக கூட வாழ்க்கையை கழித்திருக்கக்கூடும்.

அரசியல் அவரை தேடி வந்தது, நெருக்கடி நிலை வழியாக.

இந்திரா காந்தி அம்மையார் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தபோது, டெல்லி பல்கலைக்கழக வளாகத்திலேயே மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி அதிரவைத்தார் அருண் ஜெட்லி. அதற்கு பலன் உடனே கிடைத்தது. டெல்லி திகார் சிறையில் பல மாதங்கள் சிறைவாசம்.

திகார் சிறையில் அவர் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்களுடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்ததுதான், அவருக்குள் மடை மாற்றத்தை ஏற்படுத்தியது. அவருடைய மன வயலில், அரசியல், விதையாக விழுந்தது அப்போதுதான்.

சிறையில் இருந்து வெளியே வந்து, அவர் வக்கீல் தொழில் செய்தார். டெல்லியில் பிரபல ஆங்கில நாளிதழின் கட்டிடத்தை இடிக்க அங்கே கவர்னராக இருந்த ஜக்மோகன் முயற்சித்தபோது, அதை எதிர்த்தார் ஜெட்லி. அது அவருக்கும், ராம்நாத் கோயங்கா, அருண் ஷோரி, பாலி நாரிமன் ஆகியோருக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நெருக்கம், அவரை அன்றைய (1989) பிரதமரான வி.பி.சிங் கண்டுகொள்ளச்செய்தது. அவர் ஜெட்லியை, மிக இளம் வயதிலேயே மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தார்.

அப்போது இந்திய அரசியலில் சூறாவளியை ஏற்படுத்திய போபர்ஸ் ஊழல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தயார் செய்தவர் அருண் ஜெட்லிதான்.

அத்வானி தொடங்கி மாதவராவ் சிந்தியா, சரத் யாதவ் போன்ற தலைவர்களுக்கு மட்டுமின்றி, பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்காகவும் பல வழக்குகளில் திறம்பட வாதாடிய பெருமை ஜெட்லிக்கு உண்டு.

2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரங்கள் மூண்டன. அதில் பாரதீய ஜனதா தலைவர்களை வெளியே கொண்டு வந்தது, ஜெட்லியின் மூளைதான்.

அருண் ஜெட்லி யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?

காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த தலைவராகவும், மாநில நிதி மந்திரியாகவும், 2 முறை எம்.பி.யாகவும் இருந்த கிர்தாரிலால் டோக்ராவின் மகள் சங்கீதாவைத்தான் திருமணம் செய்திருக்கிறார். இவரது மண விழாவில் அன்றைய அரசியல் இமயங்களான வாஜ்பாயும், இந்திரா காந்தியும் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள்.

தனது நேர்த்தியான சட்ட அறிவாலும், தலைவர்களின் நெருக்கத்தாலும் அரசியலில் அருண் ஜெட்லி வளர்ந்தாலும், அவருக்குள் ஒரு பலவீனம், தனக்கென ஒரு தொண்டர் படையை கொண்டிராததும்; கட்சியில் அடி மட்டத்தினரின் ஆதரவை பெறாததும். அதனால்தான் அவர் எப்போதும் மாநிலங்களவை எம்.பி.யாகத்தான் தேர்வு பெற முடிந்தது.

வாஜ்பாய் மந்திரிசபையில் முதலில் செய்தி ஒலிபரப்புத்துறை ராஜாங்க மந்திரியாக இருந்தவர், பின்னாளில் சட்ட மந்திரியாக உயர்ந்தார்.

அத்வானியிடம் தனிப்பட்ட செல்வாக்கு, நெருக்கம் ஜெட்லிக்கு உண்டு. 1991 தேர்தலில் அத்வானி டெல்லியில் நடிகர் ராஜேஷ் கன்னாவை எதிர்த்து களம் கண்டபோது, அத்வானியின் தேர்தல் ஏஜெண்டு அருண் ஜெட்லி. அத்வானியின் வெற்றியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

பின்னர் ஜெட்லி, மோடியுடனான நெருக்கத்தை வலுப்படுத்திக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரசாரகராக மோடி இருந்து, பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபோது, ஜெட்லியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் மோடி என்பது நினைவுகூரத்தக்கது.

குஜராத்தில் கேசுபாய் பட்டேலை வெளியேற்றி மோடியை முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைத்ததில் ஜெட்லி தளகர்த்தராக திகழ்ந்தார். மோடியுடனும், அமித்ஷாவுடனும் அவருக்கு நெருக்கம் வளர்ந்தது.

வழக்குகளில் இருந்து மோடி, அமித்ஷா ஆகியோரை வெளியே கொண்டு வந்த பெருமை, அருண் ஜெட்லியின் மூளைக்குத்தான் உண்டு.

2006-ல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பேற்ற போது அருண்ஜெட்லி, பிரச்சினைகளில் காட்டிய தெளிவு, விரைவான சிந்தனை, அபாரமான நினைவாற்றல் போன்ற பண்புகளால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர்களின் அபிமானத்தையும் ஒருங்கே பெற்றார்.

2014 நாடாளுமன்ற தேர்தல், அருண் ஜெட்லியின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த தேர்தலில், ராஜ்நாத் சிங், சிவராஜ் சவுகான், நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, கட்சிக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படுத்திய பெருமை அருண் ஜெட்லிக்கு உண்டு.

அந்த தேர்தலில் அருண் ஜெட்லி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறாத போதும் அவரை நிதி மந்திரி ஆக்கி நாட்டின் கல்லாப்பெட்டியையே அவரிடம் ஒப்படைத்தார் மோடி. அதுவும் அந்த நாளில் நிதி மந்திரி பதவிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அருண்ஷோரி, சுப்பிரமணிய சாமி ஆகிய தலைவர்களை பின்னுக்குத்தள்ளி நிதி மந்திரி ஆனார் ஜெட்லி.

இவர் நிதி மந்திரியாக இருந்தபோதுதான், 2016 நவம்பர் 8-ந் தேதியன்று ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்து, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.

நாடு முழுவதும் ஒரே மறைமுக வரி முறையாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பை கொண்டு வந்தவர் அருண் ஜெட்லிதான்.

மனோகர் பாரிக்கர் ராணுவ மந்திரி பதவி ஏற்பதற்கு முன்னும் சரி, அவர் கோவா முதல்-மந்திரி பதவி ஏற்க ராணுவ மந்திரி பதவியை விட்டு விலகியபோதும் சரி, ராணுவ மந்திரி பொறுப்பை கூடுதலாக அருண் ஜெட்லிதான் கவனித்தார்.

ஒரே நேரத்தில் நாட்டின் நிதி மற்றும் ராணுவம் ஆகிய இரு பெரும் துறைகளை கவனித்த ஆற்றலாளர் அருண் ஜெட்லி.

அருண் ஜெட்லி, விலை மதிக்க முடியாத வைரம் என்று மோடி புகழ்ந்தார் என்றால் சும்மாவா?

அவர் வைரமாகத்தான் மின்னினார்.

சட்டமாகட்டும், நுண்ணறிவாகட்டும், செயல்படும் தன்மையாகட்டும், அரசியல் வியூகங்களை வகுப்பதிலாகட்டும், எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிப்பதாகட்டும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பிரச்சினை வந்தபோதெல்லாம் அதை எதிர்கொண்டு சமாளிப்பதிலாகட்டும், பிரதமர் மோடியின் வலது கரமாகவே செயல்பட்டவர் அருண் ஜெட்லி.

சமூக வலைத்தளங்களை கையாள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் ஜெட்லி. உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் ‘பேஸ் புக்’ பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.

அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்தபோதுகூட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டார்.

ஆனால் அதைத் தொடர்ந்து திசு புற்றுநோயும் அவரை குறி வைக்கும் என்று யாரும் எதிர்பார்த்ததில்லை.

அதனால்தான் நாடாளுமன்ற தேர்தலை தவிர்த்தார். மோடியின் 2-வது அரசில் மத்திய மந்திரி பதவியையும் தவிர்த்தார்.

வாழ்வில் எதிர் கொண்ட போராட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்றவர், எமனோடு நடத்திய போராட்டத்தில் மட்டும் தோல்வி கண்டு, மரணத்தை தழுவி இருக்கிறார்.

அரசியலில் சாணக்கியராக திகழ்ந்த அருண் ஜெட்லியின் வெற்றிடம், வெற்றிடம்தான்.


Next Story