டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லி உடல் தகனம் - சிதைக்கு மகன் தீ மூட்டினார்


டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லி உடல் தகனம் - சிதைக்கு மகன் தீ மூட்டினார்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 10:43 PM GMT)

டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் தீ மூட்டினார்.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், நாட்டின் நிதி மற்றும் ராணுவம் ஆகிய இரு பெரும் துறைகளின் மந்திரி பொறுப்பை ஒரே நேரத்தில் வகித்தவருமான அருண் ஜெட்லி (வயது 66), உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் 12.07 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவரது உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு உடனடியாக எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித் சிங், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் அருண் ஜெட்லியின் இல்லத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் அருண் ஜெட்லியின் உடல், டெல்லி தீனதயாள் மார்க்கில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமையகத்துக்கு ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.

அருண் ஜெட்லியின் உடல் அடங்கிய சவப்பெட்டி மீது மூவர்ணக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. அருகில் அவரது மனைவி சங்கீதா, மகள் சோனாலி, மகன் ரோகன் இருந்தனர்.

அங்கு பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா, பொதுச்செயலாளர் ராம் மாதவ், மூத்த மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஹர்சவர்தன், பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, இங்கிலாந்து தூதர் சர் டொமினிக் அஸ்குயித், யோகா குரு ராம்தேவ், தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ. ராசா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



 

பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்களும் திரண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்து நின்று மறைந்த தலைவருக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அருண் ஜெட்லியின் உடல், அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நிகம்போத்காட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு ஜனசங்க தலைவர் பண்டித தீனதயாள் உபாத்யாயா உடல் தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் அருண் ஜெட்லியின் உடலும் வைக்கப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி, தனது வலதுகரமாக திகழ்ந்த அருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இருப்பினும் ஜெட்லியின் குடும்பத்தினருடன் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா, மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), தேவேந்திர பட்னாவிஸ் (மராட்டியம்) விஜய் ரூபானி (குஜராத்), எடியூரப்பா (கர்நாடகம்), நிதிஷ் குமார் (பீகார்), திரிவேந்திரசிங் ராவத் (உத்தரகாண்ட்), மனோகர் லால் கட்டார் (அரியானா), பாரதீய ஜனதா செயல் தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் ரோகன் தீ மூட்டினார்.

அருண் ஜெட்லி என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது.


Next Story