மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு


மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 11:15 PM GMT (Updated: 25 Aug 2019 10:51 PM GMT)

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.

அதில், நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியா, ஒரு மாபெரும் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. உலகமே அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.

அதுதான் அக்டோபர் 2. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள். சேவை உணர்வு, காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கம். அவர் வாய்மை மற்றும் சேவையுடன் விசேஷ பிணைப்பு கொண்டிருந்தார். யாருக்கு காந்தியின் உதவி தேவைப்பட்டாலும், அவர் அங்கு இருப்பார்.

விவசாயிகள், மில் தொழிலாளர்கள், ஏழைகள், தொழு நோயாளிகள் என அனைவருக்காகவும் பாடுபட்டார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாம் பிளாஸ்டிக்கின் பிடியில் இருந்து அன்னை இந்தியாவை விடுவிக்கும் உறுதி ஏற்க பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் ஒழிப்புக்கு புதிய மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக்கை உரிய முறையில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். கடைக்காரர்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பைகளையே கொடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சமுதாய சேவை, சமுதாய அணி திரட்டல் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதே மகாத்மா காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும். காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாக்களில், அனைவரும் கைகோர்த்து பங்கேற்க வேண்டும்.

நான் பங்கேற்ற ‘டிஸ்கவரி சேனல்’ நிகழ்ச்சியில், அதை நடத்திய பேர் கிரில்ஸ், நான் இந்தியில் பேசியதை எப்படி புரிந்து கொண்டார்? என்று என்னிடம் நிறையபேர் தயங்கித்தயங்கி கேட்டார்கள்.

அதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. தொழில்நுட்பத்தால் இது சாத்தியமானது. பேர் கிரில்ஸ் தனது காதில் சிறிய ‘கார்டுலெஸ்’ கருவியை பொருத்தி இருந்தார்.

நான் இந்தியில் பேசும்போதே உடனுக்குடன் மொழி பெயர்ப்பாகி, அவருக்கு ஆங்கிலத்தில் கேட்கும். அவர் புரிந்து கொண்டு பதில் அளிப்பார்.

இயற்கை சார்ந்த இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும். நான் முன்பே வலியுறுத்தியதுபோல், எல்லோரும் தங்கள் வாழ்நாளில் வடகிழக்கு பகுதிக்கு செல்ல வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story