ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்ற விவகாரம்: மாயாவதி விமர்சனம்


ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்ற விவகாரம்: மாயாவதி விமர்சனம்
x
தினத்தந்தி 26 Aug 2019 6:32 AM GMT (Updated: 26 Aug 2019 6:32 AM GMT)

முன் அனுமதியின்றி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் செல்ல முயன்றது ஏன்? என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்னோ,

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அன்றைய தினம் முதல் காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை அந்த மாநிலத்துக்குச்செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, இன்று டுவிட்டரில் ராகுல் காந்தியை சாடியுள்ளார். மாயாவதி தனது டுவிட் பதிவுகளில் கூறியிருப்பதாவது:- முன் அனுமதி பெறாமல் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் சென்றது மத்திய அரசும், காஷ்மீர் ஆளுநரும் அரசியல் செய்வதற்கான வாய்ப்பாகிவிட்டது அல்லவா? எதிர்க்கட்சியினர் காஷ்மீர் செல்வதற்கு, முன்னதாகவே அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.

பாபா சாஹிப் அம்பேத்கர் எப்போதுமே சமத்துவம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். அதனால்தான் அவர் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ வரவேற்கவில்லை. இதன் காரணமாகவே பகுஜன் சமாஜ் கட்சியும் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை ஆதரித்தது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப சில காலமாகலாம். அதனால் உச்ச நீதிமன்றமே கூறியிருப்பதுபோல் சில காலம் காத்திருக்கலாமே” என்று தெரிவித்துள்ளார். 

Next Story