தொழிலதிபர் ரதுல் புரி ரூ. 1400 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்; புதிய தகவல்


தொழிலதிபர் ரதுல் புரி ரூ. 1400 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்; புதிய தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2019 5:41 AM GMT (Updated: 27 Aug 2019 5:41 AM GMT)

மத்திய பிரதேச முதல் மந்திரியின் மருமகனான தொழிலதிபர் ரதுல் புரி ரூ. 1400 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார் என அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மருமகனும் தொழிலதிபருமான ரதுல் புரி, இந்துஸ்தான் பவர்புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரூ.354 கோடி அளவிலான வங்கி கடன் மோசடி வழக்கில், தொழிலதிபர் ரதுல் புரி, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த 20ந்தேதி கைது செய்யப்பட்டார்.  

இந்த நிலையில், அவரது விசாரணை காவலை நீட்டிக்க கோரி நீதிமன்றத்தில் அமலாக்க துறை அனுமதி கோரியதை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட சிறப்பு நீதிபதி சஞ்சய் கார்க், தொழிலதிபர் ரதுல் புரிக்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் பினாமி பெயரில் வாங்கப்பட்டு இருந்த ரதுல் புரியின் வீட்டை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மேலும் மொரீசியசை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்று வைத்திருந்த அன்னிய நேரடி முதலீட்டு தொகை 40 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.284 கோடி) முடக்கப்பட்டது. ரதுல் புரி மீது ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கிலும் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக  ரதுல் புரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ரூ.1492 கோடி மோசடி செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய வங்கி குறிப்பிட்ட ரூ. 354 கோடியை விட பல மடங்கு அதிகமாக ரதுல் புரி மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் , ரதுல் புரிக்கு சொந்தமான நிறுவனங்கள் அவரது உண்மையான வருமானத்தை மறைக்கவும், வருமான வரித்துறையை திசை திருப்புவதற்காகவும் உருவாக்கப்பட்டுதுள்ளது என அமலாக்கதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்களன்று நீதிமன்றத்தில்,  சிறப்பு வக்கீல் விகாஸ் கார்க் மற்றும் டி.பி. சிங் ஆகியோர், பூரியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் விசாரணையை தாமதப்படுத்தவும் ஆபத்தை விளைவிக்கவும் இவ்வாறு முயற்சி செய்கிறார்கள் என்று வாதிட்டனர்.

Next Story