கேரளாவில் கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி


கேரளாவில் கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி
x
தினத்தந்தி 27 Aug 2019 4:16 PM GMT (Updated: 27 Aug 2019 4:16 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளுடன் கடையில் தேநீர் அருந்தினார்.

வயநாடு,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது.  சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது.

கேரளாவில் கடந்த 8ந்தேதியில் இருந்து பெய்து வந்த கனமழையில் 14க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.  கனமழைக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் அதிக அளவில் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  பலர் காணாமல் போயுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 11ந்தேதி முதல் 14ந்தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களை சந்தித்து வெள்ள மீட்பு பணிகளை கேட்டறிந்து கொண்டார்.

இந்நிலையில், வயநாடு தொகுதிக்கு மீண்டும் அவர் சென்றுள்ளார்.  இன்று முதல் 3 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.

முதல் நாள் பயணமாக வயநாட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.   மேலும் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். 

இதன்பின் தனது தொகுதிக்கு உட்பட்ட கஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.  அவருடன் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.  அவர் கடையில் அமர்ந்தபடியே கட்சியினரிடம் சிறிது நேரம் பேசினார்.

Next Story