ரிசர்வ் வங்கி பணம் கைமாறுவது பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து - வங்கி ஊழியர் கூட்டமைப்பு எச்சரிக்கை


ரிசர்வ் வங்கி பணம் கைமாறுவது பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து - வங்கி ஊழியர் கூட்டமைப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2019 8:55 PM GMT (Updated: 28 Aug 2019 8:55 PM GMT)

ரிசர்வ் வங்கி பணம் கைமாறுவது பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து என வங்கி ஊழியர் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐதராபாத்,

ரிசர்வ் வங்கி கையிருப்பில் உபரியாக உள்ள ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி வாரியக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், அனைத்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதார நிலைத்தன்மைக்கு பெரும் ஆபத்தாக முடியும் என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கி என்பது முற்றிலும் தன்னாட்சி அமைப்பாகும். இதை நிதியமைச்சகம் அல்லது மத்திய அரசின் நீட்டிக்கப்பட்ட கிளையாக எதிர்பார்க்கக்கூடாது. ரிசர்வ் வங்கிக்கென தனிப்பட்ட செயல்பாடுகள் உண்டு. அதில் யாரும் தலையிடக்கூடாது. ஆனால் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வெளிப்படையாக மண்டியிடச்செய்து, அரசின் நிதி பற்றாக்குறையை போக்குவதற்காக ரிசர்வ் வங்கியின் கையிருப்பை பெற முயல்கிறது’ என கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை கொந்தளிப்பான மற்றும் மிகப்பெரும் மந்தநிலையை எதிர்கொண்டுவரும் வேளையில், அதை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பொருளாதார நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெங்கடாசலம் குற்றம் சாட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்பு என தற்போது கூறப்படுவது, உண்மையான கையிருப்பு அல்ல என கூறியுள்ள அவர், இதை தனியாக பிரித்தெடுக்க முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்.

Next Story