ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
x
தினத்தந்தி 29 Aug 2019 11:53 AM GMT (Updated: 29 Aug 2019 11:53 AM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சி.பி.ஐ. ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவருடைய காவல் விசாரணை 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. 

ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் நேற்று முன்தினம் வாதாடினார். நேற்று அமலாக்கத்துறை தரப்பில் பதில் வாதங்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  முன்வைத்தார்.

மேலும் வாதங்களை இன்று முடித்துக் கொள்வதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு  இருந்தது. 

அதன்படி அமலாக்கத்துறை சார்பில் இன்று  துஷார் மேத்தா வாதாடினார்.

சிதம்பரம் தப்பிக்க நினைக்கிறாரா என்பதை விசாரணை அமைப்பு முடிவு செய்யும். சிதம்பரத்திடம் நாங்கள் நேர்காணல் செய்ய விரும்பவில்லை; அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க விரும்புகிறோம். வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை வைத்து விசாரணை நடத்தவுள்ளோம். வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விட தப்பிக்கவே அதிகமாக ப.சிதம்பரம் முயற்சி செய்தார்.  சிதம்பரம் செய்த  குற்றம்  சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிரானது. ’தயவுசெய்து சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்’ என வாதாடினார்.

ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபில் வாதிடும் போது, 

சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என கூறவில்லை, மாறாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைதுக்கு முன்னதாகவே முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு செய்து விட்டார், முன்ஜாமின் கோருவது மனுதாரரின் உரிமையாகும். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, 2017-ம் ஆண்டு கைது செய்யவில்லை, ஆனால் தற்போது கைது செய்துள்ளனர். கணக்கில் வராத ஒரு வங்கி கணக்கையோ, சொத்தையோ அமலாக்கத்துறையை காட்டச் சொல்லுங்கள் என வாதிட்டார்

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் செப்டம்பர் 5-ந்தேதி  வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளது. ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Next Story