பள்ளியில் தலித் மாணவர்களை தனியாக அமரவைத்து மதிய உணவு; மாயாவதி கண்டிப்பு


பள்ளியில் தலித் மாணவர்களை தனியாக அமரவைத்து மதிய உணவு; மாயாவதி கண்டிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 1:24 PM GMT (Updated: 29 Aug 2019 1:24 PM GMT)

உ.பி. பள்ளியொன்றில் தலித் மாணவர்களை தனியாக அமரவைத்து மதிய உணவு பரிமாறப்பட்ட விவகாரத்திற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிட சப்பாத்திக்கு உப்பு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி ஒன்றில் தலித் மாணவர்களுக்கு தனியே மதிய உணவு பரிமாறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லியா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சாதிப் பிரிவினைக்கு ஆளாகியுள்ளனர். பள்ளியில் மதிய உணவின்போது தலித் மாணவர்கள் தனியாக அமரவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பள்ளியில் தலித் மாணவர்கள் உணவுக்காக தங்களது தட்டுகளை வீட்டிலிருந்து கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், பின்னர் தனியாக அமர வைக்கப்பட்டுள்ளனர்.  இதனை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். தொடக்கப் பள்ளி முதல்வர் பி. குப்தா பேசுகையில், உயரதிகாரிகள் ஆய்வுக்கு வந்திருந்தபோது சாதி அடிப்படையில் வேறுபாடு காட்ட வேண்டாம் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதன்பிறகும் இங்கு இந்த நடைமுறை தொடர்கிறது எனக் கூறியுள்ளார்.

மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். ஆனால் நாங்கள் புறப்பட்டதும் அவர்கள் தனியே பிரிக்கப்படுகிறார்கள். அனைவரும் சமம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால், அவர்களுக்கு வீட்டில் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டிய பாடங்கள் மிகவும் வலிமையானவையாகும். இங்குள்ள உயர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடன் தலித் பிரிவு மாணவர்களை அமர அனுமதிக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இச்சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “பல்லியாவில் அரசு பள்ளியில் தலித் மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணும் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய இழிவான இனவெறி பாகுபாடு காட்டுபவர்கள் மீது அரசு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாகுபாடு காட்டும் பள்ளி அதிகாரிகள் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்கள் பாடம் கற்கும் விதமாக அமைய வேண்டும். இனி இதுபோன்ற தவறை யாரும் செய்யக்கூடாது,” எனக் கூறியுள்ளார்.  

Next Story