தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது: முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்


தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது: முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 8:36 PM GMT)

ஒப்பந்தப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது என முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மைசூரு,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்பந்தப்படி இந்த ஆண்டு தமிழகத்திற்கு, கர்நாடகம் சார்பில் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

கர்நாடகாவில் பருவமழை கொட்டி தீர்த்ததால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதேபோல் கபினி அணையும் தனது முழுகொள்ளளவை எட்டியது. இவ்விரு அணைகளில் இருந்துதான் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள கே.ஆர்.எஸ். அணையில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு பூஜை செய்தார். அப்போது அவர் நவதானியங்கள், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்களை அணையில் வீசி வழிபட்டார். பின்னர் அவர் அணையின் நடுவே அமைந்திருக்கும் காவிரித்தாய் சிலைக்கும் சிறப்பு பூஜை செய்தார்.

பின்னர் அணையின் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதமாக பெய்துள் ளது. இருப்பினும் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்பந்தப்படி இந்த ஆண்டு தமிழகத்திற்கு, கர்நாடகம் சார்பில் வழங்கப்பட வேண்டிய தண்ணீரையும் திறந்து விட்டுள்ளோம்.

இதனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது. கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 49.50 டி.எம்.சி. தண்ணீர் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி நீர்) உள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து அணைகள் நிரம்ப வேண்டும்.

விவசாயிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பிரச்சினை தீர வேண்டும். இதற்காக நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.


Next Story