ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 5-ந் தேதி வரை தடை நீட்டிப்பு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 5-ந் தேதி வரை தடை நீட்டிப்பு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Aug 2019 10:03 PM GMT (Updated: 29 Aug 2019 10:05 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 5-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை அடுத்து சி.பி.ஐ. அவரை கைது செய்து விசாரித்து வருகிறது.

அமலாக்கத்துறைக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்றும் தனது வாதத்தை தொடர்ந்தார்.

அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பல்வேறு முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கினால் விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி, ஜாகீர் நாயக் ஆகியோர் தொடர்பான வழக்குகளும் பாதிக்கப்படும். பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் குறித்து கேள்வி கேட்க தொடங்கினால், அது அந்த தடயங்கள் மற்றும் சாட்சியங்களை பகிரங்கப்படுத்தி விடும். இதனால் குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களை கலைக்கவும் முறைகேடாக பணம் சென்ற வழியை அடைக்கவும் உதவும் ஆபத்து உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து தகவல்களை உருவி எடுக்கும் விசாரணை என்பது தனியான ஒரு கலையாகும். இந்த வழக்கில் விசாரணை என்பது பேட்டியின் வடிவத்தில் அமையும் கேள்வி பதிலாக இருக்க முடியாது.

எந்த தகவலை வெளியிடுவது, எதனை மறைத்து வைப்பது என்பது விசாரணை அமைப்பின் தனிப்பட்ட உரிமையாகும். முன்ஜாமீன் கோரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் அனைத்து சாட்சியங்கள் மற்றும் தடயங்களை வெளியிட்டால் அது முழு வழக்கின் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும்.

சில முக்கியமான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், ஐகோர்ட்டு அல்லது மற்ற கோர்ட்டுகளின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீட்டை விசாரிக்கும் கோர்ட்டாக சுப்ரீம் கோர்ட்டு செயல்பட முடியாது. ஜாமீன் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பொதுவாக தலையிடுவது இல்லை. ஜாமீன் விவகாரத்தில் ஐகோர்ட்டே இறுதி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

பொதுவாக வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் எந்தவகையிலும் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். அதே நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து வழக்கு தொடர்பான உண்மையை பெறுவதற்கான சிறந்த வழி அவர் ஜாமீன் என்ற பாதுகாப்பில் இருக்கக் கூடாது.

இந்த வழக்கின் தீவிரத்தன்மை பற்றி எதிர் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்களுக்கு வேண்டுமானால் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான குற்றங்கள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் பொருளாதாரம் தொடர்பான குற்றங்கள் மிகவும் தீவிரத்தன்மை கொண்டவை என்று பல்வேறு கோர்ட்டுகள் கருத்து தெரிவித்து உள்ளன. ஒரு வழக்கில் முன்ஜாமீன் கோரும்போது அந்த வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

இந்த வழக்கில் குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்துக்கு முன்பே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அதற்கு எதிரான சட்டப்பிரிவு இருந்திருக்கிறது. எனவே பின்னர் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக எதிர்தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது அமலாக்கத்துறை தரப்பில் ஒரு குறிப்பு தாக்கல் செய்யப்பட்டு அந்த குறிப்பு பரிசீலிக்கப்பட்டது. ஐகோர்ட்டின் தீர்ப்பில் முன்ஜாமீன் மறுக்கும் முடிவை ஆவணங்களின் அடிப்படையில் எடுத்தாக இரு இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் உள்ளிட்ட எங்கள் வசம் உள்ள ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டு ஒருமுறை பார்வையிட்டால் இந்த விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் வலுவானதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரு உறையில் ‘சீல்‘ வைக்கப்பட்டு தயாராக உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு அதை ஆய்வு செய்ய விரும்பினால், தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு கூறி தங்கள் தரப்பு வாதத்தை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் முன் வைத்த எதிர்பதில் வாதத்தின் போது கூறியதாவது:-

அமலாக்கப்பிரிவு தரப்பில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்த பதில் மனுவில் உள்ள விஷயங்களை மனுதாரரிடம் காண்பித்ததாகவும் அதன் மீதான பதில்களை அவர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்டவரிடம் தரப்பட்டதா? என்பதை கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும்.

மனுதாரரை கைது செய்யமுடியாது என்பது எங்கள் வாதம் அல்ல. அமலாக்கத்துறை அவரிடம் காண்பித்த ஆவணங்கள் மீதான பதிலை அவர் தவிர்த்ததாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது. அந்த ஆவணங்களை அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணை எல்லாம் முடிவடைந்த பிறகு அமலாக்கத்துறை ஒரு குறிப்பை கோர்ட்டில் தாக்கல் செய்து அந்த குறிப்பின் அடிப்படையில் சில கருத்துகளை கோர்ட்டின் கருத்தாக தீர்ப்பில் சேர்ப்பது எந்த வகையான நீதியில் சேரும்?

அந்த குறிப்பு சரியான சான்று அல்ல. சட்டத்தின் பார்வையில் சான்று என்பது ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தது. விசாரணை அதிகாரியின் கருத்து மற்றும் அவருடைய மதிப்பீடு என்பது எப்போதும் வழக்கு டைரியின் ஒரு பகுதியாக இருக்க முடியாது.

விசாரணை அமைப்பு ஏதேனும் ஆவணத்தை கண்டெடுத்தால் அதனை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் அந்த ஆவணம் விசாரணை அதிகாரியின் கருத்தின் அடிப்படையில் அமைந்ததாகவும், பிறகு அது தீர்ப்பின் அடிப்படையாகவும் அமையக் கூடாது. விசாரணை அமைப்பின் கைது செய்யும் உரிமையை மனுதாரர் எப்போதும் மறுத்தது கிடையாது.

முன்ஜாமீன் பெறுவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு வழங்கும் உரிமையாகும். விசாரணை அமைப்பு நியாயமாகவும் சார்பு இன்றியும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மனுதாரரை கைது செய்யலாம். மனுதாரரை குற்றம் புரிந்தவர் என்று கண்டுபிடித்தால் அதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யாமல், ஐகோர்ட்டு நீதிபதியிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை 2017-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது மனுதாரரை இவர்கள் கைது செய்யவில்லை. குற்றம் புரிந்தவர் என்று இவர்கள் கண்டுபிடித்து இருந்தால் அவரை கைது செய்திருக்க வேண்டும். அவருக்கு முன்ஜாமீன் கோரும் வாய்ப்பை அளித்து இருக்கக்கூடாது.

அவரை கைது செய்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் முன்ஜாமீன் அல்லது சாதாரண ஜாமீன் கோருவது அவருடைய உரிமை. அந்த மனுவை முறைப்படி விசாரிப்பதுதான் முறையாகும். சுதந்திரம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பதுபோல, ஒருவருக்கு சுதந்திரத்தை மறுப்பதும் ஒரு வழிப்பாதை கிடையாது. இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடுகையில் கூறியதாவது:-

ஐகோர்ட்டில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த பிறகு ‘சீல்‘ வைத்த உறையில் ஆவணங்களை நீதிபதிக்கு அமலாக்கத்துறை தந்தது தவறான நடைமுறையாகும். இந்த குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் தற்போது உள்ள 4 பிரிவுகளில் 3 பிரிவுகள் கிடையாது. எனவே அதன் அடிப்படையில் வழக்கை பதிவு செய்தது தவறு. மனுதாரர் 2014-ம் ஆண்டில் இருந்து கைது செய்யப்படவில்லை. இப்போது இப்படி அவசர அவசரமாக கைது செய்வதற்கு காரணம் என்ன? இவ்வாறு அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு வருகிற செப்டம்பர் 5-ந் தேதி வழங்கப்படும் என்றும், அதுவரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், ப.சிதம்பரத்துக்கு எதிராக தங்களிடம் இருப்பதாக கூறும் ஆவணங்களை அமலாக்கத்துறை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கிடையே, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தங்கள் காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story