மகாராஷ்டிராவில் 130 வருட பழமையான திருவிழாவில் இம்ரான் கான் உருவ பொம்மை எரிப்பு


மகாராஷ்டிராவில் 130 வருட பழமையான திருவிழாவில் இம்ரான் கான் உருவ பொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2019 2:12 PM GMT (Updated: 31 Aug 2019 2:12 PM GMT)

மகாராஷ்டிராவில் 130 வருட திருவிழா கொண்டாட்டத்தில் இம்ரான் கான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

நாக்பூர்,

மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் ஜகநாத் புத்வாரி என்ற பகுதியில் அமைந்த பிலி மர்பாத் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது.  இந்த கோவிலில் காளி (கருப்பு நிறம்) மற்றும் பிவ்லி (மஞ்சள் நிறம்) என இரு உருவ பொம்மைகள் உருவாக்கப்படும்.

இந்த பொம்மைகள் பொதுமக்களால் தனித்தனியாக பேரணியாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் நேரு புட்லா சதுக்கத்தில் ஒன்றாக சந்திக்க வைக்கப்படும்.  அவற்றின் மீது மக்கள் பூவிதழ்களை தூவுவார்கள்.  இதன்பின்பு அவை தீ வைத்து எரிக்கப்படும்.  இதனால் தீய சக்திகள் ஒழிந்துவிடும்.  வியாதிகள் விலகும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் அவர்களை எதிர்த்த போன்ஸ்லா ராணி பங்காபாய் பின்னர் பிரிட்டிஷாரிடம் சரண் அடைந்து விட்டார்.  இதில் பிவ்லி பொம்மை ஆங்கிலேயரையும், காளி பொம்மை ராணியையும் குறிக்கிறது.

ஒரு சமூக மக்கள் இந்த பொம்மைகளை சகோதரிகள் என்றும் இந்த குறிப்பிட்ட ஒரு நாளில் அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்கின்றனர் என்றும் நம்புகின்றனர்.  இந்த பொம்மைகள், விருப்பங்களை நிறைவேற்றும் என்றும் சிலர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் இந்த பேரணி கடந்த 1885ம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.  எனினும், 130 வருட பழமை வாய்ந்த இந்த திருவிழாவில், பக்தர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உருவ பொம்மையையும் இந்த வருடம் எரித்தனர்.

Next Story