சமூக ஆர்வலர் மேதா பட்கரின் 9 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு


சமூக ஆர்வலர் மேதா பட்கரின் 9 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு
x
தினத்தந்தி 3 Sept 2019 7:49 AM IST (Updated: 3 Sept 2019 7:49 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஆர்வலர் மேதா பட்கர் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தினை முடித்து கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூடவும், அணையின் நீர்மட்டத்தை 138.68 மீட்டராக உயர்த்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அணை திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அவருக்கு ஆதரவாக பர்வானி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்தது.

எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு, போராட்டக்காரர்களின் உயிரை காப்பாற்றுமாறு பிரதமர் மோடிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பாக கட்சியின் தலைவர்களில் ஒருவரான பினோய் விஸ்வம் எம்.பி., மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில் அவர், ‘சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் 192 கிராமங்களை சேர்ந்த 32 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆபத்து ஏற்படும். மக்களின் நல்வாழ்வுக்காகவே வளர்ச்சி திட்டங்கள் இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் வாழ்வை சீர்குலைப்பதற்காக இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டு உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடும் அனைத்து இந்தியர்களுக்கும் மேதா பட்கரின் உயிர் விலைமதிப்பற்றது எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத், முன்னாள் செயலாளரான எஸ்.சி. பெஹார் என்பவரை பட்கரிடம் பேச்சுவார்த்தை நடத்த தூது அனுப்பினார்.

இதன்படி, நேற்றிரவு பட்கரை நேரில் சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தினை கைவிடும்படி அவர் கேட்டு கொண்டார்.  அவரிடம் பட்கர் ஆலோசனை மேற்கொண்டார்.  இதில், சரோவர் அணையின் நீர்மட்ட அளவை குறைப்பதற்கான முயற்சிகளில் மத்திய பிரதேச அரசு ஈடுபட்டு உள்ளது என்ற தகவலை பட்கரிடம் பெஹார் கூறினார்.  இதனை முதல் மந்திரி கவனத்தில் கொண்டுள்ளார் என்றும் கூறினார்.

இதன்பின் பட்கருக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்து பெஹார் உண்ணாவிரதத்தினை முடித்து வைத்துள்ளார்.  பட்கருடன் உண்ணாவிரதம் மேற்கொண்ட 4 பெண்கள் உள்பட 6 பேரும் தங்களது உண்ணாவிரதத்தினை முடித்து கொண்டனர்.

Next Story