கல்யாண ராணியின் கைவரிசை! அமெரிக்கர் உள்பட 5 பேரை திருமணம் செய்து கோடிக்கணக்கில் சுருட்டினார்
கல்யாண ராணியின் கைவரிசை அமெரிக்கர் உள்பட 5 பேரை திருமணம் செய்து கோடிக்கணக்கில் சுருட்டியவர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் நரசிம்மா வேணுகோபால். இவர் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ம் 2018ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்த அருணா என்ற பெண்ணின் படத்தை பார்த்தார். நல்ல முகத்தோற்றம், வசீகரமான அழகு. பிஎஸ்சி நர்சிங் படிப்பு என்பதாலும் தனது பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார் என்றும் கருதினார். இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு பேசினார். அவரும் நரசிம்மாவின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இருவரும் அடிக்கடி போனில் பேசினர். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். அதன்படி 2018ம் ஆண்டு பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
மகிழ்ச்சியாக தொடங்கிய மணவாழ்க்கை 4 மாதங்களில் கசந்தது. அடிக்கடி கணவரிடம் சண்டை போட தொடங்கினார் அருணா. தொடர்ந்து தகராறு ஏற்பட்ட நிலையில் நரசிம்மா கொடுத்த நகைகளுடன் திடீரென மாயமானார். ஆனால் சில நாட்களில் சமாதானம் அடைந்து அவரே வருவார் என காத்திருந்தார் நரசிம்மா. ஆனால் அருணா வரவில்லை.இந்நிலையில் தனது வீட்டில் இருந்த அருணா திருமணத்தின்போது எடுத்து வந்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில், அருணா பலரை திருமணம் செய்த புகைப்படங்கள் இருந்தது. இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நரசிம்மா, ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாவை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு;-
மேட்ரிமோனி இணையதளத்தை தொடர்ந்து கவனிக்கும் அருணா, பெரும்பாலும் மனைவியை இழந்தோ, பிரிந்தோ இருக்கும் நிலையில் 2வது திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் திருமணத்திற்காக ஏங்குபவர்களை குறி வைத்துள்ளார். அவர்களை தொடர்பு கொண்டு அன்பாக பேசி காதல் வலை வீசுவார். அவ்வாறு வலையில் சிக்குபவர்களை திருமணம் செய்துகொண்டு நைசாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறிப்பாராம். அவ்வாறு திருமணம் செய்துகொண்ட பிறகு அவர்களுடன் ஜாலியாக இருந்துவிட்டு சில மாதங்களிலேயே அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பெறமுடியுமோ அவற்றை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் காந்த். இவரை காதல் வலை வீசி திருமணம் செய்த அருணா சில மாதங்கள் அவருடன் அன்பாக பழகியுள்ளார். அவரிடம் சுமார் ரூ.15 லட்சம் சுருட்டியுள்ளார். அவரை ஏமாற்றிவிட்டு வாரங்கல்லை சேர்ந்த ஹரிஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவரிடம் குடும்பம் நடத்திய அருணா, 2 மாதங்களில் கடும் சண்டை போட்டுவிட்டு ரூ.20 லட்சம் வரை ஏமாற்றிக்கொண்டு மாயமானார்.
தொடர்ந்து திருமணங்களை வெற்றிகரமாக நடத்தி ஏமாற்றிய அருணாவின் பார்வை அமெரிக்காவை நோக்கி பாய்ந்தது. திருமண வலைவீசி அமெரிக்காவில் வசிக்கும் பவன்குமாரை மடக்கியுள்ளார். அவரையும் தனது திட்டப்படி திருமணம் செய்து கொண்டு ரூ.50 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். இவர்கள் மட்டுமின்றி மேட்ரிமோனி இணையதளம் மூலம் மேலும் 5 பேரையும் திருமணம் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் பலரை இவ்வாறு ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து அருணாவை ஐதராபாத் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story