மும்பையில் மீண்டும் கனமழை : ரெட் அலெர்ட் எச்சரிக்கை


மும்பையில் மீண்டும் கனமழை :  ரெட் அலெர்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Sep 2019 12:37 PM GMT (Updated: 4 Sep 2019 12:37 PM GMT)

மும்பையை மீண்டும் கனமழை மிரட்டுவதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்து 3 நாட்களுக்குப் பிறகே வெள்ளம் வடிந்து மும்பை மாநகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

இந்நிலையில்  நேற்று  இரவு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சயான் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.

 தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மும்பையின் கிங் சர்கில் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளிலும், காந்தி மார்க்கெட் பகுதியிலும் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் சியன்  பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்பட்டனர். இந்நிலையில் இன்று மும்பையில் வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதியான தானேவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதுடன் சுரங்கப்பாதைகள் மூழ்கின. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையால் பால்கர் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வியாழக்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என்று புதிய ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி-கல்லூரிகளுக்கு  விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பை மற்றும் பிற அருகிலுள்ள மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய   அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். அவசர காலங்களில் 100 ஐ டயல் செய்யுங்கள். மும்பையை கவனித்துக் கொள்ளுங்கள் என மும்பை போலீஸ் கூறி உள்ளது.

Next Story