மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை - ஆமதாபாத் தனியார் ஆஸ்பத்திரியில் நடந்தது


மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை - ஆமதாபாத் தனியார் ஆஸ்பத்திரியில் நடந்தது
x
தினத்தந்தி 5 Sept 2019 4:45 AM IST (Updated: 5 Sept 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஆமதாபாத் தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று திடீரென ஒரு அறுவை சிகிச்சை நடந்தது.

ஆமதாபாத்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா (வயது 54). பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியையும் சேர்த்து வகிக்கிறார். இவருக்கு கழுத்தின் பின்புறம் ஒரு கட்டி இருந்து வந்தது.

இந்த நிலையில் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் குஜராத் மாநிலம், ஆமதாபாத் வந்தார்.

அவர் நேற்று காலை 9 மணிக்கு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியான குசும் தீரஜ்லால் ஆஸ்பத்திரியில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவரது கழுத்தில் இருந்த கட்டியை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

அந்த கட்டி ‘லிபோமா’ என்று அழைக்கப்படுகிற சாதாரண திசு கட்டிதான் என டாக்டர்கள் கூறினர். இருப்பினும் அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவது நல்லது என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.

அதை அவரும் ஏற்றுக்கொண்டார்.

உடனே அவருக்கு அங்குள்ள டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றினர். தற்போது அவர் நலமாக உள்ளார்.

இதுபற்றி ஆஸ்பத்திரி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ஆதித் தேசாய் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அமித்ஷா காலை 9 மணிக்கு குசும் தீரஜ்லால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது கழுத்தின் பின்புறம் இருந்த கட்டி ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அமித்ஷா பகல் 12.30 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள தனது தால்தேஜ் இல்லத்துக்கு திரும்பினார். அங்கு அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இன்று ஒரு நாள் ஓய்வு எடுத்து விட்டு, அவர் நாளை டெல்லி திரும்புவார் என தகவல்கள் கூறுகின்றன.

அமித்ஷாவின் கழுத்தின் பின்புறம் இருந்த லிபோமா கட்டி, சருமத்தின் கீழ் வருகிற ஒரு கட்டிதான்; இது கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்வதால் ஏற்படுகிறது; லிபோமா கட்டிகள் தீங்கு இல்லாத கட்டிகள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.


Next Story