‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது’ பா.ஜனதா குற்றச்சாட்டு
பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
சண்டிகர்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் பொருளாதாரம் குறித்த காங்கிரசாரின் கருத்துகளுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் கூறுகையில், ‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்பி வருகிறது.
இந்த தவறான பிரசாரத்துக்கு மன்மோகன் சிங் தலைமை தாங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மன்மோகன் சிங் வெளியிட்ட விரிவான அறிக்கையில், உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு சிறந்த பொருளாதாரவாதியாக அவர் அதையும் குறிப்பிட்டு இருந்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு பதவிக்காலத்தில் நாட்டின் சராசரி உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.7 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் பிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகளின் பொருளாதார விகிதம் 7.3 சதவீதம் எனவும் தருண் சுக் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story