திகாரில் ப.சிதம்பரத்தின் முதல் நாள் இரவு... சிறப்பு வசதிகள் இல்லை...


திகாரில் ப.சிதம்பரத்தின் முதல் நாள் இரவு... சிறப்பு வசதிகள் இல்லை...
x
தினத்தந்தி 6 Sep 2019 7:55 AM GMT (Updated: 6 Sep 2019 7:55 AM GMT)

திகார் சிறையில் முதல் நாள் இரவில் ப.சிதம்பரம் உறக்கமின்றி தவித்துள்ளார்.

புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 15 நாள் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவரை வருகிற 19-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

திகாரில் 4-ம் எண் கதவு வழியாக அவர் சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்டார். மீடியாக்கள் சிதம்பரத்தைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது, சிறை அதிகாரிகள் அவரின் முகத்தை மூட முயன்றனர். ஆனால், சிதம்பரம் அலட்டிக் கொள்ளவில்லை.

அவருக்கு தனி செல் எண் 7 ஒதுக்கப்பட்டது. இந்தச் சிறையில் 600 முதல் 700 கைதிகள் உள்ளனர். பெரும்பாலானோர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதேபோல், பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களும் இந்தச் சிறையில் அடைக்கப்படுவது காலம்காலமாக நடைமுறையில் உள்ளது.

எல்லாக் கைதிகளையும் போல சிதம்பரமும் சிறை நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு தொலைக்காட்சி பார்க்கவும்  அனுமதிக்கப்படுவார். திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள இதே சிறையில்தான் மகன் கார்த்தியும் அடைக்கப்பட்டிருந்தார். கார்த்தி இங்கே 12 நாட்கள் இருந்தார். நேற்று இரவு உணவாக 5 சப்பாத்தி, பருப்பு கூட்டு, கொஞ்சம் சாதம் வழங்கப்பட்டது. சிதம்பரம் கொஞ்சமாகச் சாப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வட இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.

சிறை விதிப்படி கைதிகள் தரையில்தான் உறங்க வேண்டும். சீனியர் சிட்டிசன் என்ற அடிப்படையில் ப.சிதம்பரத்துக்கு மரக்கட்டில் கொடுக்கப்பட்டது.  சிதம்பரம் உறங்காமல் நீண்டநேரம் கண் விழித்து இருந்துள்ளார்.

கேன்டீனிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை செல்லில் அடைக்கப்படுவார். காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை காலை உணவு வழங்கப்படும் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால்  விசாரிக்கப்பட்டு வரும் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி அவருக்கு கண்ணாடி, மருந்து மாத்திரைகள் மற்றும்  வெஸ்டர்ன் கழிப்பறை வழங்கப்படும் என்று திகார் சிறைச்சாலைகளின் கண்கணிப்ப்பாளர் சந்தீப் கோயல் கூறி உள்ளார்.

Next Story