மாநில அரசை கேட்காமல் வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு - மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம்


மாநில அரசை கேட்காமல் வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு - மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம்
x
தினத்தந்தி 7 Sept 2019 5:28 AM IST (Updated: 7 Sept 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசை கேட்காமல் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட 2 வங்கிகளை வேறு வங்கிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தா,

மத்திய அரசு கடந்த 30-ந் தேதி பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் ஏற்கனவே இருந்த 27 வங்கிகள், 12 ஆக குறைக்கப்படுகிறது. இதில் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட ‘யூனியன் பாங்க் ஆப் இந்தியா’ பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட 2 பொதுத்துறை வங்கிகள் டெல்லி மற்றும் சென்னையை தலைமையிடமாக கொண்ட 2 வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக அறிவித்திருப்பதற்காக நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசுடனோ அல்லது அந்த வங்கிகளின் நிர்வாகத்துடனோ கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி ஆகிய இரண்டும் இந்த மாநிலத்தில் முன்னணி வங்கிகளாக உள்ளன. இந்த வங்கிகளை இணைப்பது என்ற ஒருதலைப்பட்சமான முடிவும், அதன் தலைமை அலுவலகங்களை மேற்குவங்காளத்தில் இருந்து இடமாற்றுவதும் மாநிலத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். இரு வங்கிகளின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் குறித்தும் நான் கவலைப்படுகிறேன்.

எனவே ஆகஸ்டு 30-ந் தேதி அறிவித்தபடி வங்கிகளை இணைக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Next Story