வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் “சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி”
தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார்.
சென்னை,
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக கடந்த 28-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்கு சென்றார். அங்கு, தொழில் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, 1-ந் தேதி அமெரிக்கா சென்றார். 3-ந் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அங்கு 16 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், தமிழ்நாட்டில் 2,780 கோடி ரூபாய் முதலீடும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் சான் யூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து, வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள வசதிகள் பற்றியும், தங்களின் சிறப்பான அனுபவங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் சென்னை திரும்பகிறார். இங்கிலாந்து, துபாய் அமெரிக்கா , நாடுகளில் 13 நாட்கள் சுற்று பயணத்தை முடித்து கொண்டு (10 ஆம் தேதி) நாளை மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
Related Tags :
Next Story