4-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் : துணை முதல்வர்- ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
பள்ளியின் துணை முதல்வர் உட்பட இரண்டு ஆசிரியர்களால் 4 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தன்பாத்,
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் டாபச்சஞ்சி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் படிக்கும் 4ம் வகுப்பு மாணவி ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என குற்றம் சாட்டியதை அடுத்து, பள்ளியின் துணை முதல்வர், இரண்டு ஆசிரியர்களுக்கு எதிராக கத்ராஸ் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு சிறுமி வகுப்பறையில் மயக்கம் அடைந்து உள்ளார். ஒரு ஆசிரியர் சிறுமியை ஓய்வு அறைக்கு அனுப்பினார், அங்கு செவிலியர் மருந்து கொடுத்துள்ளார். இதில் சிறுமி சுயநினைவை இழந்து உள்ளார். இதை தொடர்ந்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. துணை முதல்வரும், வகுப்பு ஆசிரியரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்குப் பிறகு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவரிடம் சிறுமியின் பெற்றோர் அழைத்துச் சென்றனர். சிறுமியை சோதனை செய்த மருத்துவர் , சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக கூறி உள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தன்பாத் மூத்த போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.
"இந்த வழக்கை காவல்துறை அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரித்து வருகிறது. மேலும் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறி உள்ளார்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை பட்லிபுத்ரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் செவிலியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று பள்ளியின் முதல்வர் தனுஸ்ரீ பானர்ஜி தெரிவித்தார்.
"பள்ளியின் ஓய்வறை மாணவர்களால் நிரம்பியிருப்பதால் இதை நான் நம்பவில்லை. இருப்பினும், குற்றச்சாட்டு தீவிரமானது. விசாரணையில் காவல்துறையினருடன் பள்ளி ஒத்துழைக்கும்" என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story