சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; மத்திய பிரதேச முதல் மந்திரி பங்கு பற்றி விசாரிக்க முடிவு


சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; மத்திய பிரதேச முதல் மந்திரி பங்கு பற்றி விசாரிக்க முடிவு
x
தினத்தந்தி 9 Sept 2019 8:48 PM IST (Updated: 9 Sept 2019 8:48 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச முதல் மந்திரி தொடர்புடைய சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரிக்க உள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ம் ஆண்டு கலவரம் வெடித்தது.  இதில், 7 வழக்குகள் 7 காவல் நிலையங்களில் பதிவாகின.

இந்த 7 வழக்குகளில் ஒன்றில் குற்றவாளிகளான 5 பேருக்கு மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் அடைக்கலம் கொடுத்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த 7 வழக்குகளையும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து இதற்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது.

இதுபற்றி டெல்லி எம்.எல்.ஏ. மன்ஜீந்தர் சிங் சிர்சா கூறும்பொழுது, மூத்த காங்கிரஸ் தலைவரான கமல்நாத்தின் பெயர் புதுடெல்லி பார்லிமென்ட் ஸ்டிரீட் காவல் நிலையத்தின் எப்.ஐ.ஆர் பதிவில் இல்லை.  அந்த வழக்கில் குற்றவாளிகளான 5 பேர் கமல்நாத்தின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

அவர்கள் அனைவரும் போதிய சான்றுகள் இல்லாத நிலையில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.  இந்த வழக்கையும் சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரிக்க உள்ளது.  அவர்கள் முன் 2 சாட்சிகள் ஆஜராகி கலவரங்களில் கமல்நாத்தின் பங்கு பற்றி கூறுவார்கள் என்று கூறியுள்ளார்.

அந்த இரு சாட்சிகளில் ஒருவரான சஞ்சய் சூரி இங்கிலாந்து நாட்டிலும், முக்தியார் சிங் பாட்னாவிலும் வசித்து வருகின்றனர்.  அவர்கள் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக உள்ளனர் என்றும் சிர்சா கூறியுள்ளார்.  இதனால் கமல்நாத்துக்கு எதிரான விவகாரம் பெரிய அளவில் கிளம்பும் என கூறப்படுகிறது.

Next Story