நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகல்


நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 10 Sept 2019 4:07 PM IST (Updated: 11 Sept 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.

மும்பை,

பிரபல நடிகை ஊர்மிளா மடோங்கர் காங்கிரசில் இருந்து திடீரென விலகி உள்ளார். அவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர். இந்தியில் வெளியான ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ்பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய சமயத்தில் இவர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் வடமும்பை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

ஆனால் அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஊர்மிளாவை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுமார் 4½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

45 வயது ஊர்மிளா மடோங்கர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்து மதம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன் தனக்காக தேர்தல் பணியாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் மீது புகார் கடிதம் ஒன்றை மாநிலத்தலைமைக்கு எழுதி இருந்தார். அந்த கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஊர்மிளா நேற்று திடீரென காங்கிரசில் இருந்து விலகினார். இதுதொடர்பாக அவர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து ஊர்மிளா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது அரசியல் மற்றும் சமூக பொறுப்புகள் அனுமதிக்கப்படாமல் மறுக்கப்படுகிறது. மும்பை காங்கிரஸ் கட்சியில் உயர்ந்த இலக்கு இல்லாமல் தேவையில்லாத சச்சரவுகள் நடக்கின்றன. எனது புகார் கடிதம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நடிகை ஊர்மிளா மடோங்கர் காங்கிரசில் இணைந்த 6 மாதத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story