டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம்: இன்று முதல் அருண் ஜெட்லி மைதானம்


டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம்: இன்று முதல் அருண் ஜெட்லி மைதானம்
x

பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் பெயரை சூட்டும் விழா இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 1999 முதல் 2003-ம் ஆண்டு வரை இருந்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றி இருக்கும் அவர் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். டெல்லி கிரிக்கெட் மேம்பாட்டுக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.

புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியம் தற்போது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி கிரிக்கெட் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மறைந்த அருண்ஜெட்லியை கவுரவிக்கும் வகையில், பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் பெயரை சூட்டும் விழா இன்று நடைபெறுகிறது. இதற்கான முடிவை டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள நிலை​யில் இன்று அதற்கான விழா நடைபெறுகிறது.

இந்த விழாவின் போது மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு விராட் கோலியின் பெயரை சூட்டி, அந்த கேலரியின் திறப்பு நிகழ்வும் நடைபெறுகிறது. முன்னதாக இந்த விழாவில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் சாதனைகள் குறித்து அனிமேஷன் படமும் திரையிடப்படுகிறது. மேலும் இன்று நடைபெறும் விழாவில்  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

Next Story