ரூ.28 லட்சம் நிரப்பப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்


ரூ.28 லட்சம் நிரப்பப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 12 Sep 2019 9:30 PM GMT (Updated: 12 Sep 2019 9:02 PM GMT)

ரூ.28 லட்சம் வைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் சான்படியா டிகுலியா பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. அந்த எந்திரத்தில் ரூ.28 லட்சம் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள், பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து, அதை அப்படியே கொண்டு சென்று விட்டனர்.

இதற்கிடையே, நேற்று காலையில், அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் சுக்லா என்பவர் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் ஏ.டி.எம். எந்திரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சான்படியா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் மணீஷ் குமார் சர்மா, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். போலீஸ் துணை சூப்பிரண்டு பங்கா ரவத் மற்றும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பக்கத்து கிராமங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அந்த ஏ.டி.எம். எந்திரத்தில், ரூ.28 லட்சம் வைக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும், அதன் பிறகு வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் எடுத்தனர், அதுபோக எவ்வளவு பணம் எந்திரத்தில் இருந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை.

இந்த துணிகர கொள்ளை குறித்து சான்படியா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தும்போது, அபாய மணி ஒலிக்கும்வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த கொள்ளை குறித்து வங்கி நிர்வாகமோ, ஏ.டி.எம். காவலாளியோ போலீசுக்கு தகவல் கொடுக்கவில்லை என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயந்த் காந்த் தெரிவித்தார்.

Next Story