பள்ளியில் மாணவனை பூட்டிவைத்ததால் தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்டு’


பள்ளியில் மாணவனை பூட்டிவைத்ததால் தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்டு’
x
தினத்தந்தி 13 Sep 2019 8:15 PM GMT (Updated: 13 Sep 2019 8:12 PM GMT)

பள்ளியில் மாணவனை பூட்டிவைத்ததால் தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

பாலசோர்,

ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில் மகாவீர் நோடல் என்ற பள்ளி உள்ளது. அங்கு 1-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கழிவறைக்கு சென்று இருக்கிறான். இதை கவனிக்காத பள்ளி அலுவலக உதவியாளர் பள்ளியின் ‘கேட்டை’ மூடிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மாணவன், பள்ளியில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ந்து அழத் தொடங்கினான். பூட்டிய ‘கேட்’ அருகே நின்று அவன் தொடர்ந்து அழுது கொண்டு நின்றான். சாலை வழியாக சென்றவர்கள் அதைப்பார்த்து அங்கு கூடினர். இதை அறிந்த பள்ளி உதவியாளர் அங்கு வந்து ‘கேட்டை’ திறந்துவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் சிறுவன் அழுது கரைந்துவிட்டான். அப்போது சிறுவனின் தந்தை அங்கு வந்தார். மகன் அழுவதைக் கண்டு உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரியிடமும் புகார் அளித்தார். “ஆசிரியரிடம் சொல்லிவிட்டுத்தான் என்னுடைய மகன் கழிவறைக்கு சென்று இருக்கிறான். அதை பொருட்படுத்தாமல் கேட்டை பூட்டி இருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். இதன் காரணமாக பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி பிரிதிமாவை பள்ளி கல்வி துறை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Next Story