மழை வேண்டி தவளைக்கு திருமணம்; வெள்ளம் ஏற்பட்டதால் ‘விவாகரத்து’


மழை வேண்டி தவளைக்கு திருமணம்; வெள்ளம் ஏற்பட்டதால் ‘விவாகரத்து’
x
தினத்தந்தி 14 Sept 2019 2:30 AM IST (Updated: 14 Sept 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி தவளைக்கு திருமணம் நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளம் ஏற்பட்டதால் விவாகரத்து செய்யப்பட்டது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட காலமாக மழை இல்லையென்றால் இரண்டு பொம்மை தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும், அதனால் கடவுள் திருப்தி அடைந்து மழை பொழிவார் என்பதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த வருடம் அங்கு சரிவர பருவமழை பெய்யவில்லை. இதனால் வறட்சி நிலவியது. இதற்காக ஓம் சிவசக்தி அமைப்பினர் தவளைகள் திருமண விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தனர். களிமண்ணால் ஆன இரண்டு தவளை பொம்மைகளை செய்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் போபாலில் மழை கொட்ட தொடங்கியது. மக்களும் பிரார்த்தனை நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைந்தனர். மழையோ இடைவிடாமல் கொட்ட தொடங்கியது. மத்தியபிரதேசம் இதுவரை கண்டிராத கனமழையை சந்தித்தது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. மத்தியபிரதேசத்தில் ஆண்டுதோறும் பெய்யும் சராசரி மழை அளவைவிட இந்த முறை 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்து இருக்கிறது. போபாலில் மட்டும் 81 சதவீதம் மழை கொட்டியது. இதனால் இடைவிடாத மழையினை நிறுத்த விரும்பிய மக்கள் ஏற்கனவே திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்து துரந்த் மகாதேவ் கோவிலில் வைத்து முறைப்படி விவாகரத்து நடந்தது. நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் இரண்டு தவளை பொம்மைகளையும் பிரித்துவிட்டு, வேத மந்திரங்கள் ஓதி விவாகரத்து செய்தனர்.


Next Story