வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் ராணுவத்துக்கு பாராட்டு மழை


வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் ராணுவத்துக்கு பாராட்டு மழை
x
தினத்தந்தி 14 Sept 2019 12:57 PM IST (Updated: 15 Sept 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பதிலடியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, சக ராணுவ வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக் கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 10-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் வீரர்கள் திடீரென அத்துமீறி இந்திய பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கே பாதுகாப்பு பணிகளை கவனித்துக்கொண்டிருந்த இந்திய வீரர்கள், உடனடியாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிப்பூர் பகுதியில் நடந்த இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த குலாம் ரசூல் என்ற வீரர் குண்டுபாய்ந்து உயிரிழந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட பகவல்நகரை சேர்ந்த அந்த வீரரின் உடலை எடுத்துச்செல்ல சக வீரர்கள் முயன்றனர்.

இதற்காக இந்திய படையினருடன் ஒருபுறம் சண்டையிட்டவாறே, மறுபுறம் குலாம் ரசூலின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் பதிலடியை நிறுத்தாத இந்திய வீரர்களும், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிட்டனர். இதில் ரசூலின் உடலை மீட்க முயன்ற மற்றொரு வீரரும் குண்டடிபட்டு சுருண்டு விழுந்து இறந்தார்.

இந்தியாவின் அதிரடி தாக்குதலில் பலியான இந்த இருவரின் உடல்களையும் மீட்க மற்ற வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் முடியவில்லை. இதற்காக 2 நாட்களாக போராடியும் பலியானவர்களின் உடல்களை எடுத்துச்செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (13-ந் தேதி) அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைக்கொடியை ஏந்தினர். இந்திய நிலைகள் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டு, வெள்ளைக்கொடியுடன் அந்த வீரர்களின் உடல்களை நோக்கி முன்னேறினர்.

வெள்ளைக்கொடியை ஏந்தியிருந்ததாலும், பலியான வீரர்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கிலும் இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்தியது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வந்து தங்கள் சக வீரர்களின் உடல்களை மீட்டு சென்றனர்.

இந்த காட்சிகளை இந்திய வீரர்கள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். அந்த வீடியோவை அவர்கள் நேற்று வெளியிட்டனர். இது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதைப் பார்த்த பலரும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story