‘கேட்ச்’ பிடிக்க பந்தின் மீது கண் வையுங்கள் - பொருளாதார மீட்புக்கு பிரியங்கா யோசனை


‘கேட்ச்’ பிடிக்க பந்தின் மீது கண் வையுங்கள் - பொருளாதார மீட்புக்கு பிரியங்கா யோசனை
x
தினத்தந்தி 15 Sept 2019 3:15 AM IST (Updated: 15 Sept 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

கேட்ச் பிடிக்க பந்தின் மீது கண் வையுங்கள் என பொருளாதார மீட்புக்கு பிரியங்கா யோசனை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மோட்டார் வாகன துறையின் தேக்கநிலைக்கு ஊபர், ஓலா போன்ற வாடகை கார்களை மக்கள் பயன்படுத்த விரும்புவதே காரணம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

“பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கை எட்டுவதை கணித பார்வையில் பார்க்கக்கூடாது. ஏனென்றால், புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் உதவவில்லை” என்று மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். இதற்காக இருவரும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பொருளாதார மந்தநிலை தொடர்பாக, மேற்கண்ட 2 மத்திய மந்திரிகளின் கருத்துகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நல்ல ‘கேட்ச்’ பிடிப்பதற்கு பந்தின் மீதே கண்பார்வையை வைத்திருப்பதும், உண்மையான விளையாட்டு உணர்வு கொண்டிருப்பதும் முக்கியம். இல்லாவிட்டால், புவிஈர்ப்பு விசை, கணிதம், ஊபர்-ஓலா ஆகியவற்றைத்தான் குறை சொல்ல வேண்டி இருக்கும். இந்திய பொருளாதாரத்தின் நலனுக்காக இதை வெளியிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story