அமித்ஷாவின் இந்தி குறித்த கருத்து, பிற மொழி பேசும் மக்களுக்கு எதிரான போர் கூக்குரல் - பினராயி விஜயன்


அமித்ஷாவின் இந்தி குறித்த கருத்து, பிற மொழி பேசும் மக்களுக்கு எதிரான போர் கூக்குரல் - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 15 Sept 2019 12:51 PM IST (Updated: 15 Sept 2019 3:35 PM IST)
t-max-icont-min-icon

அமித்ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்திருந்த கருத்து, இந்தியாவில் பிற மொழிகள் பேசும் மக்களுக்கு எதிரான போர் கூக்குரல் போன்றது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நாட்டு மக்களுக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்த உள்துறை மந்திரி அமித்‌ஷா, சர்வதேச அளவில் நமது நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “இந்தி நம் நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற கூற்று அபத்தமானது. அந்த மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல. அவர்கள் மீது இந்தியை திணிப்பது அவர்களை அடிமைப்படுத்துவது போன்றதாகும். மத்திய அமைச்சரின் அறிக்கை இந்தி அல்லாத பிற மொழிகளை தங்கள் தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு எதிரான போர் கூக்குரல்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பினராயி விஜயன், தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் இந்தி மொழியை திணிக்க முயல்வதன் மூலம் ‘சங் பரிவார்’ மொழியின் பெயரில்  ஒரு புதிய போர்க்களத்தை உருவாக்குகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

Next Story