பிரதமர் மோடியை மம்தா சந்திக்க இருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் - பா.ஜனதா கருத்து


பிரதமர் மோடியை மம்தா சந்திக்க இருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் - பா.ஜனதா கருத்து
x
தினத்தந்தி 16 Sept 2019 10:51 PM IST (Updated: 16 Sept 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் என அம்மாநில பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரம் தொடர்பாக, மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நாளை மறுநாள் (18ம் தேதி) பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசுக்கெதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்து தனது மாநிலத்தில் பா.ஜனதா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை அரசியல் ரீதியாக மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். மேலும் சாரதா நிதி நிறுவன முறைகேடு, மேற்குவங்க மாநிலம் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை, சி.பி.ஐ. கைது செய்ய முயன்றபோது, விடிய விடிய போராட்டம் நடத்தி மம்தா பானர்ஜி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க மேற்குவங்க முதல்-மந்திரி அலுவலகம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வரும் புதன்கிழமை (18ம் தேதி) சந்தி்ப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, மாநில வளர்ச்சி, மாநில நலன் சார்ந்த சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில பா.ஜனதா , “மம்தா பானர்ஜி, சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறார். குற்றம் இழைத்தவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாரதா நிதிநிறுவன முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ. நடவடிக்கைகளிலிருந்து இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காகவே, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்” என குற்றம் சாட்டியுள்ளது.


Next Story