டெல்லியில் காஷ்மீர் நிலவரம் குறித்து அமித்ஷா ஆலோசனை


டெல்லியில் காஷ்மீர் நிலவரம் குறித்து அமித்ஷா ஆலோசனை
x
தினத்தந்தி 17 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் நிலவரம் குறித்து டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதுடன், வாகன இயக்கமின்றி சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தரைவழி தொலைபேசி இணைப்புகள் செயல்பாட்டுக்கு வந்தாலும், செல்போன் இணைப்புகள், இணையதள சேவைகள் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. மேலும் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை 43-வது நாளாக நேற்றும் தொடர்ந்து முடங்கியது.

இதற்கிடையே காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுமார் 230 பேர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயிற்சி முகாம்களில் தயாராக இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவுவதற்கு வசதியாக அங்கு பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை நடத்துவதாக பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் 15-வது படைப்பிரிவின் தளபதி கே.ஜே.எஸ்.தில்லான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று உயர்மட்ட அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

அப்போது காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் நிலவும் சூழல் குறித்தும், அங்கு அமைதி நீடிக்க எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அமித்ஷாவிடம் விளக்கி கூறப்பட்டது. மேலும் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை நிலவரம் குறித்தும், அங்கு பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அமித்ஷாவின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story