ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்


ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்
x
தினத்தந்தி 17 Sep 2019 7:32 AM GMT (Updated: 17 Sep 2019 8:31 AM GMT)

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

ஜெய்பூர், 

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது. மொத்தம் உள்ள 200 இடங்களில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில்,  வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரி லோக் தளம் கட்சியும் ஆதரவு அளித்தன. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை  கைப்பற்றி அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில்,  அம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரும் தங்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷியிடம் நேற்று நள்ளிரவு சென்று வழங்கினார்கள்.

ஒட்டுமொத்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதால், அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story