மோடி அரசு 5 ஆண்டு காலத்தில் 50 பெரிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது - அமித்ஷா
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டு காலத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 50 பெரிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பாஜகவின் கனவு ஆகஸ்ட் 5-ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளில் நிறைவேறியதாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா,
30 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் ஒரு திட்டத்தை மட்டுமே செயல்படுத்தும் அரசுகள் மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டு காலத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 50 பெரிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாக்கு வங்கிக்காக அல்லாமல் மக்களின் நலனுக்காகவே எந்த முடிவையும் எடுத்துள்ளது.
2013-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் ஊழல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. நமது நாட்டின் எல்லைகள் பாதுகாப்பற்றவையாக இருந்தது. நமது ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். பெண்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தனர். சாலைகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். முந்தைய ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் தன்னை பிரதம மந்திரியாக நினைத்துக்கொண்டனர். ஆனால் பிரதமரை பிரதமர் என்று கூட அவர்கள் நினைக்கவில்லை.
2024-க்கு முன்னதாகவே இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக வளரப்போகிறது. இது நிச்சயம் நடைபெறும். இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக உருவாகும்.
மக்கள் இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த ஆட்சியை சீர்தூக்க வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொள்கை முடக்கமே இருந்தது. ஆனால் இப்போதைய பாஜக ஆட்சி முடிவுகளை எடுப்பதில் முக்கியத்துவம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story