‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடித்தே தீருவோம்’ - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உறுதி


‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடித்தே தீருவோம்’ - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உறுதி
x
தினத்தந்தி 17 Sep 2019 1:47 PM GMT (Updated: 17 Sep 2019 8:51 PM GMT)

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான், அதை ஒரு நாள் பிடித்தே தீருவோம் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உறுதிபட கூறினார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இது எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகளை அனுப்பி, நாசவேலைகளில் ஈடுபடுத்தி வந்த பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது. அடுத்த கட்டமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியா கைப்பற்றி விடும் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு உண்டு.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பொறுத்தமட்டில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அது, இந்தியாவின் ஒரு பகுதிதான். அதை ஒரு நாள் பிடித்தே தீருவோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசப்படுமே தவிர, காஷ்மீரைப்பற்றி அல்ல என்று இந்தியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டவிழ்த்துவிடும் கலாசாரம் பற்றியும் வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் குறிப்பிடத் தவறவில்லை. இதுபற்றி அவர் கூறும்போது, “தனது அண்டை நாட்டுடன் பயங்கரவாதத்தை அரங்கேற்றும் ஒரு நாட்டை எனக்கு காட்டுங்கள். எனவே எங்கள் நிலைமை முற்றிலும் இயல்பானது, சீரானது. அவர்கள் நடத்தைதான் மாறுபாடானது. அங்குதான் அசாதாரண நிலை உள்ளது” என குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என்று தொனிக்கிற வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய கருத்து பற்றி வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிடுகையில், “ பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்றால், அவர்கள் பேச்சுவார்த்தையில் மட்டும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் அங்குள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு எதையும் செய்வது இல்லை. உண்மையான பிரச்சினையே, பயங்கரவாத முகாம்களை அகற்றுவதில்தான் இருக்கிறது” என்று கூறினார்.


Next Story