தேசிய செய்திகள்

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு காங்கிரசில் சேர்ந்தனர் - மாயாவதி ஆவேச பாய்ச்சல் + "||" + Bahujan Samaj MLAs joined Congress in conjunction - Mayawati air flow

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு காங்கிரசில் சேர்ந்தனர் - மாயாவதி ஆவேச பாய்ச்சல்

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு காங்கிரசில் சேர்ந்தனர் - மாயாவதி ஆவேச பாய்ச்சல்
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் கூண்டோடு காங்கிரசில் இணைந்தனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 6 பேர் வெற்றி பெற்றனர். 13 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.


அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது. அந்த அரசுக்கு 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களும், 13 சுயேச்சைகளில் 12 பேரும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தொடங்கினர்.

அதனால், பெரும்பான்மை ஆதரவுடன் அசோக் கெலாட் அரசு நடந்து வருகிறது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும், ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் சபாநாயகர் சி.பி.ஜோஷியை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவை தெரிவிக்கும் கடிதத்தை அவரிடம் அளித்தனர்.

ராஜேந்திரசிங் குதா, ஜோகேந்திரசிங் அவானா, வஜிப் அலி, லகான்சிங் மீனா, சந்தீப் யாதவ், தீப்சந்த் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்களும் இந்த கடிதத்தை அளித்தனர். இதுகுறித்து ஜோகேந்தர்சிங் அவானா கூறுகையில், “மாநில நலன் கருதி, காங்கிரஸ் அரசை வலுப்படுத்துவதற்காக, 6 பேரும் காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளோம். முதலில் நாங்கள் முதல்-மந்திரியை சந்தித்தோம். பிறகு சபாநாயகரை சந்தித்து கடிதம் அளித்தோம்” என்றார்.

6 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலைத்தொடர்ந்து, சட்டசபையில் காங்கிரசின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. 2 இடங்கள் காலியாக உள்ளன.

அந்த 2 காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், அவர்கள் கட்சி மாறி உள்ளனர்.

இந்த கட்சி தாவலை அறிந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் இந்த முடிவு துரோக செயல். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, மீண்டும் ஒரு முறை பகுஜன் சமாஜ் கட்சியை உடைத்திருக்கிறது. இதன் மூலம், அக்கட்சி நம்பகத்தன்மையற்றது என்பது தெளிவாகி விட்டது.

தனது எதிரிகளுடன் மோதுவதை விட்டுவிட்டு, தனக்கு ஒத்துழைக்கிற, ஆதரவு அளிக் கிற கட்சிகளுக்கு தீங்கு விளைவிக்கவே காங்கிரஸ் எப்போதும் பாடுபடுகிறது. ஆகவே, அது பட்டியல் இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டவருக்கு எதிரான கட்சி ஆகும். இந்த வகுப்பினரின் இடஒதுக்கீட்டு உரிமைக்கு காங்கிரஸ் எப்போதும் உண்மையாக இருந்தது இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டும், ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் இருந்தார். அவரது அரசுக்கு அறுதி பெரும் பான்மைக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் பற்றாக்குறை இருந்தது.

அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருந்த 6 பேரையும் அசோக் கெலாட் காங்கிரசில் சேர வைத்தார். அதன்மூலம் அவரது அரசின் பலம் 102 ஆக உயர்ந்ததுடன், பெரும்பான்மையும் கிடைத்தது. அப்போது கட்சி மாறிய 6 பேரில், இப்போது கட்சி மாறிய ராஜேந்திர சிங் குதாவும் ஒருவர் ஆவார்.